

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களிலும் SIR பணிகளை தொடங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
மக்கள் இடம்பெயர்வது, விரைவான நகரமயமாக்கல், இளைஞர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெறுவது, வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் சேர்க்கப்பட்டது, போலி பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக இந்த சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கியதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளும், பிரச்சனைகளும், குழப்பங்களும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் பணிகள் குறித்து சில அரசியல் கட்சிகளும் அச்சம் தெரிவித்துள்ளன.
கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பித்தக்கது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த 4-ம்தேதி முதல் (SIR) தீவிரமாக நடைபெற்று வருகிறது. வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களை வழங்கி நிரப்பி அவற்றை பெறும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இந்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், ஆங்காங்கே விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் SIR திருத்தப்பணியை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சிலர் மோசடியில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. அதாவது, புதுவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியின்போது, சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு OTP எண் கேட்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இதனால் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் உஷாராக இருக்குமாறு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் வேகமான நடைபெற்று வரும் SIR திருத்தப்பணியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சில மோசடி நபர்கள், பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வாக்காளர் பட்டியல் படிவம் நிரப்புவது தொடர்பாக பேசுவதாகவும், உங்கள் தொலைபேசியில் OTP வந்திருக்கும் அதை கூறுங்கள் என்று கேட்கின்றனர்.
இதை உண்மை என்று நம்பி OTP எண்ணை பகிர்ந்தால் உங்களது வங்கிக்கணக்கில் இருந்து பணம் பறி போய் விடும். SIR திருத்தப்பணியில் OTP கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்று யாரும் OTP எண் கேட்டால் பகிர வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர். மேலும் யாராவது உங்களை போனில் கட்டாயப்படுத்தி OTP கேட்கும் பட்சத்தில் அழைப்பு வந்த எண்ணை குறித்து வைத்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்திலோ அல்லது சைபர் கிரைம் போலீசிலோ புகார் செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
SIR திருத்தப்பணி தொடர்பாக பொதுமக்களுக்கு சந்தேகம் வந்தால் உங்கள் தொகுதி வாக்குச்சாவடி நிலைய அதிகாரியின் செல்போன் எண்ணை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.
SIR திருத்தப்பணியை காரணமாக வைத்து கொண்டு சமீப காலமாக இது போன்ற மோசடிகள் நடைபெற தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று புதுவையில் மட்டும் இதுவரை 5 புகார்கள் வந்துள்ள நிலையில் சைபர் கிரைம் போலீசில் மேலும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக தெரியவந்துள்ளது.