

பீகாரை தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR என்கிற சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் 2-ம் கட்டமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெறுவதையொட்டி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி(SIR) கடந்த மாதம் 4-ம்தேதி தொடங்கியது. இந்த பணி தொடங்கியதில் இருந்தே அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் SIR பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வரும் 11-ம்தேதியுடன் SIR பணிகள் முடிவடைய உள்ளது. அதன் பின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் உங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்க ஒருமாத காலம் அவகாசம் அளிக்கப்படும். கடைசியாக பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் தான் 2026-ம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும்.
எனவே மக்கள் சிரமம் பார்க்காமல் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறா என்பதை பார்த்து உடனே உங்களது ஆதாரங்களை காட்டி உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் பெயர் சேர்க்கப்படாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்த கொள்ள வேண்டும்.
இதுவரை வெளியான தகவலின் அடிப்படையில் குறைந்தது 85 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையே 6.41 கோடி தான்.
இதில் கிட்டதட்ட 13 சதவீத வாக்காளர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் 45 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். ஆனால் தற்போது தமிழகத்தில் முதல் கட்டமாக வரும் தகவலே 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 40 லட்சம் வாக்காளர்களில் பல காரணங்களுக்காக 12 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் என லட்சக்கணக்கானோர் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் தமிழகத்தில் பெரும் சர்ச்சை வெடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இத்தனை லட்சம் வாக்காளர்களை நீக்குவார்களா என்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்ட போது அதுகுறித்து உறுதியாக எந்த தகவலையும் கூறவில்லை. தற்போது SIR பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணி 11-ம்தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு தான் எவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்பது குறித்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் போது தான் தெரியவரும். அதற்கு முன் எந்த கருத்தையும் அதிகாரப்பூர்வமாக சொல்ல விரும்பவில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எனவே உங்கள் பகுதியில் உள்ள தேர்தல் அலுவலர் யார் என்பதை பார்த்து உங்கள் முகவரி, உங்கள் ஆவணங்களை எல்லாம் சமர்பித்து உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியுமா பார்ப்பது நல்லது.
அதேபோல் 16-ம்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும். அதில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை பாருங்கள். அப்படி இல்லையென்றால் உடனடியாக விண்ணப்பிப்பது மிகமிக அவசியம் என்பதை மக்கள் மறந்து விட வேண்டாம்.
டிசம்பர் 16 முதல் ஜனவரி 15 வரை சிறப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அப்போது உங்கள் பெயர் இல்லையென்றால் பெயரை சேர்க்கலாம், ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம், நாங்கள் இந்த பகுதியில் தான் இருக்கிறோம், எங்களது முகவரி மாறி உள்ளது என்பது போன்ற மாற்றங்களை செய்வதற்கு ஒருமாத காலம் அவகாசம் உள்ளது.
அந்த ஒரு மாதத்திற்குள் விண்ணப்பிப்பது போன்றவற்றை செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் உங்கள் பெயர் காணாமல் போய்விடும். உங்கள் வாக்குரிமையை நீங்கள் பறிகொடுத்து விடுவீர்கள் என்பதை மறந்து விட வேண்டும். வரைவு வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்தும் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளலாம்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்த பிறகு தான் புதிய வாக்காளர்கள் படிவங்களை வழங்கி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர். வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் எத்தனை பேரை வாக்காளர்களாக சேர்க்கப்போகிறார்கள் என்பது எல்லாம் அதன் பிறகு தான் தெரியவரும்.
2002 மற்றும் 2005ல் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் தங்களது பெயரோ அல்லது உறவினர்களின் பெயரோ கண்டறிய முடியவில்லை என்றால், இருக்கும் தகவல்களை மட்டும் பூர்த்தி செய்து கொடுக்கும்படி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்திருக்கிறார்.
எனவே மக்களே சற்றும் சிரமம் பார்க்காமல் உடனடியாக உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை சரிபார்த்து உடனடியாக உங்களது பெயரை சேர்க்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்வதன் மூலம் உங்களது வாக்குரிமையை பெறமுடியும்.
அதேபோல் SIR படிவத்தில் தவறான தகவல் கொடுத்தால், பூத் அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பார்கள் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் SIR படிவத்தில் தவறான தகவல் கொடுத்ததன் காரணமாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராம்பூரில் வசித்துவரும் நூர்ஜஹான் என்ற பெண்ணின் இருமகன்களும் பலகாலமாக துபாய், குவைத் நாடுகளில் வசித்து வருகின்றனர். ஆனால் நூர்ஜஹான் SIR படிவத்தில் அவர்கள் ராம்பூரில் வசிப்பதாக போலி கையெழுத்திட்டு விண்ணப்பித்திருப்பது தெரியவந்ததையடுத்து அவரது குடும்பத்தினர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் SIR படிவத்தில் போது தவறான தகவல்களை வழங்கியதற்காக நாட்டிலேயே முதல் முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.