

இபிஎஃப்ஓ வாட்ஸ்அப் சேவை மூலம் பிஎஃப் பேலன்ஸ், பாஸ்புக் டவுன்லோடு மற்றும் பரிவர்த்தனை விவரங்களை மொபைலிலேயே பெறுவது எப்படி என்று முழு விவரம்.
இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்களுக்கும் ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO), சந்தாதாரர்கள் தங்களது பிஎஃப் (PF) கணக்கு இருப்பு, பாஸ்புக் மற்றும் பரிவர்த்தனை விவரங்களை உடனடியாகப் பெறும் வகையில் புதிய வாட்ஸ்அப் (WhatsApp) சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் அலுவலகங்களுக்கு அலையாமல் அல்லது வலைதளங்களில் சிரமப்படாமல் மொபைல் போனிலேயே அனைத்து விவரங்களையும் எளிதாகப் பெற முடியும்.
இந்தச் சேவையைப் பயன்படுத்த சந்தாதாரர்கள்+91 8796441800 என்ற இபிஎஃப்ஓ-வின் வாட்ஸ்அப் எண்ணை தங்கள் தொலைபேசியில் சேமித்துக்கொள்ள வேண்டும் (அல்லது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ள QR கோடை ஸ்கேன் செய்யலாம்). பின்னர் அதில் 'Hi' எனச் செய்தி அனுப்பினால், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் யுஏஎன் (UAN) எண்களை அடிப்படையாகக் கொண்டு சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும்.
மேலும் இது அனைத்து மொழிகளிலும் இயங்கும் வகையிலும், 24 மணி நேரமும் செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் மெசேஜ் அனுப்பிய உடன் உங்களின் மொழியை தேர்வு செய்ய சொல்லும். மொழியை தேர்வு செய்த பிறகு திரையில் தோன்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பேலன்ஸ், பாஸ்புக், கடைசி 5 பரிவர்த்தனைகள் என ஆப்ஷன் காட்டும். அதில் எது வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ளலாம். பின்னர் அதில் கேட்கும் தகவல்களை உள்ளிட்டால் நீங்கள் பேலன்ஸ் உள்ளிட்ட தகவல்களை வாட்ஸ் அப் வாயிலாகவே தெரிந்து கொள்ள முடியும். மேலும், செயலற்ற சில கணக்குகளுக்குத் தானியங்கிப் பணம் செலுத்தும் முறையையும் இபிஎஃப்ஓ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பிஎஃப் உறுப்பினர்கள் எளிய முறையில் தங்களது கணக்கு விவரங்களை மொபைல் போனிலேயே தெரிந்துகொள்ள முடியும். வாட்ஸ் அப்பிலேயே பல சேவைகளும் கிடைக்கும் என்பதால் பல்வேறு தளங்களில் லாகின் செய்ய வேண்டிய தொல்லை இனி இல்லை.
வாட்ஸ்அப் சேவை மூலம் பெறக்கூடிய வசதிகள் :
பி.எஃப் சந்தாதாரர்கள் தங்கள் மொபைல் மூலமாகவே பின்வரும் சேவைகளைப் பெற முடியும்:
* பி.எஃப் கணக்கின் தற்போதைய பேலன்ஸ் சரிபார்த்தல்
* கடைசி 5 பரிவர்த்தனைகளின் விவரங்களைப் பார்த்தல்
* பி.எஃப். பாஸ்புக்கை டவுன்லோட் செய்தல்
மேலும், பிரதமர் விக்ஷித் பாரத் வேலைவாய்ப்பு திட்டம் (PMVBRY) தொடர்பான வழிகாட்டுதல்களையும் இந்த வாட்ஸ்அப் சேவை மூலம் பெறலாம்.
புதிய சேவை தொடங்கப்பட்டிருந்தாலும், தற்போது இந்த வாட்ஸ்அப் சாட்போட் சேவையில் சில தாமதங்களும் தொழில்நுட்பப் பிழைகளும் ஏற்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் பயனர்கள் உடனடியாகத் தங்களது கணக்கு விவரங்களைச் சரிபார்க்க முற்படும்போது சிரமங்களைச் சந்திக்க நேரிடுவதாக கூறப்படுகிறது. எனவே, சேவைகள் முழுமையாகச் சீராகும் வரை பயனர்கள் சற்றுப் பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுவாக பிஎஃப் பேலன்ஸை தெரிந்து கொள்ள நாம் மெசேஜ், மிஸ்டு கால் சேவைகளை பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் இணையதளம் அல்லது செயலிக்கு சென்று லாகின் செய்ய வேண்டும். ஆனால் இந்த புதிய வாட்ஸ்அப் சேவை முறையானது, பிஎஃப் சேவைகளை எளிதாக பயன்படுத்த வழிவகை செய்துள்ளது. ஆனால் இதற்கு பிஎஃப் கணக்கில் நீங்கள் கொடுத்துள்ள மொபைல் எண் உங்களிடம் இருக்க வேண்டும். அதில் வாட்ஸ் அப் சேவை இருக்க வேண்டும்.
மேலும் பிஎஃப் கணக்கில் அனைத்து தகவல்களும் அப்டேட்டாக இருக்க வேண்டும். இதனுடன், ரூ.1,000 வரை இருப்புத் தொகை கொண்ட, ஆதார் சரிபார்க்கப்பட்ட செயல்படாத (Inoperative) EPF கணக்குகளுக்குத் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்கத் தேவையின்றி, நேரடியாகப் பணப் பரிமாற்றம் செய்யும் ஆட்டோமெட்டிக் செட்டில்மென்ட் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேவையான அடையாள மற்றும் வங்கி கணக்கு சரிபார்ப்புகளுக்குப் பிறகு, இபிஎஃப்ஓ அமைப்பே தானாகவே பணத்தை வரவு வைக்கும் செயல்முறையை தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 லட்சம் கணக்குகளைச் சேர்ந்த ரூ.5 கோடி மதிப்பிலான தொகைப் பயனாளிகளுக்குச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அக்டோபர் 2026-இல் கோரிக்கைகளுக்கான சராசரி தீர்வு நேரம் 2.57 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.