இந்தியாவில் சர்க்கரை விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.கரும்பு உற்பத்தி குறைவு காரணமாக, பல சர்க்கரை ஆலைகள் உற்பத்தியின்றி மூடி கிடக்கின்றன. சர்க்கரை உற்பத்தி குறைந்ததால், விலை உயரத் தொடங்கி உள்ளது.தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு தேவையான கரும்புக்கு, அண்டை மாநிலங்களை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, நாடு முழுதும் பண்டிகை காலம் துவங்கி உள்ளது. ஓணம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி, என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளன. சர்க்கரையின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா , உ.பி,கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில், சர்க்கரை உற்பத்திக்கான கரும்பு சாகுபடி, 5 கோடி ஏக்கரில் நடப்பது வழக்கம். ஆனால், தற்போது பல மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணாமாக கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.உற்பத்தி குறைவை கருத்தில் வைத்து, விலையை ஏற்றுவதற்காக, நாடு முழுதும் உள்ள 'ஆன்லைன்' மொத்த வர்த்தகர்கள், சர்க்கரையை பதுக்கி வைப்பதை அதிகரித்துள்ளனர்.
இந்தியாவில் சர்க்கரையின் விலை ஆகஸ்ட் 20 அன்று சராசரி சில்லறை விலை கிலோ ரூ.68.50 ஆக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 2 அன்று ரூ.45 ஆக இருந்த விலை ஒரே மாதத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் தமிழ்நாட்டில் தேநீர், காபி உள்ளிட்ட அன்றாடப் பொருட்களின் விலை உயர்வாக வெளிப்படத் தொடங்கியுள்ளது.சில்லறை வர்த்தகத்தில் மட்டும் சர்க்கரையின் விலை கடந்த ஓராண்டில் மட்டும் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது.சென்னையில் ஒரு மாதத்திற்கு முன், 1 கிலோ, 47 ரூபாய்க்கு விற்கப்பட்ட சர்க்கரை, தற்போது 70-75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நேரத்தில் இந்த விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நமது நாட்டில் இ-20 வகை பெட்ரோல் பயன்படுத்தப்படுகிறது. இ-20 பெட்ரோல் தயாரிப்பதற்கு கரும்பை மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது . எனவே அதற்கு கரும்பு தேவை மிக அதிகமாக இருப்பதால் சர்க்கரை விலை கூடுவதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு இ-20 பெட்ரோல் விற்பனைக்கும், சர்க்கரை விலை திடீர் உயர்வுக்கும் சம்பந்தமில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளது.இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக தமிழ்நாட்டில் சர்க்கரை விலை மேலும் உயர்ந்துள்ளது.சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் டீ, காபி விலையும் அதிகரிக்கும் நிலைமை உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு,பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் டீ, காபி விலை கணிசமாக உயர்த்தப்பட்டது. தற்போது சர்க்கரை தட்டுப்பாடு காரணமாக மீண்டும் டீ, காபி விலை ரூ20, ரூ25 என உயரக் கூடும் என்கிற தகவல் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சர்க்கரையின் விலை மூட்டைக்குக் கணிசமாக உயர்ந்துள்ளதால், நஷ்டத்தைத் தவிர்க்கும் பொருட்டுத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டீ மற்றும் காபி விலையை மீண்டும் உயர்த்த தேநீர் கடை உரிமையாளர்கள் பரிசீலித்து வருகின்றனர்.
கடந்த வாரம் 50 கிலோ கொண்ட சர்க்கரை மூட்டை 2,250-க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை திடீரென அதிகரித்து ரூ.3,600 ஆக உயர்ந்துள்ளது.
சர்க்கரை விலை உயர்வின் காரணமாக பால்கோவாவின் விலையும் கிலோவிற்கு சுமார் ரூ.80 வரை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ பால்கோவா ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வுடன், பால் உள்ளிட்ட பிற உற்பத்திச் செலவுகளும் அதிகரித்து வருவதால், பால்கோவா தயாரிப்பாளர்கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் பால்கோவாவை வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், தற்போதைய விலை உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில், உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால் விலை உயர்வை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், ஸ்ரீவில்லிபுத்தூரின் புகழ்பெற்ற பால்கோவா தொழிலை நம்பியுள்ள சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் கவலை அடைந்துள்ளனர். மூலப்பொருட்களின் விலை கட்டுக்குள் வந்தால் மட்டுமே பால்கோவாவின் விலையையும் கட்டுப்படுத்த முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.