

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் (2026-27) நிதியமைச்சர் மரிய வில்சன் அவர்களால் நேற்று (ஆகஸ்ட் 5)சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இப்புதிய பட்ஜெட்டில் 'அண்ணன் சீர்', 'வெற்றி மடிக்கணினி' மற்றும் நவீன சைக்கிள் வழங்கும் புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் திட்டம் மற்றும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் போன்ற மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.
எனினும், எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே இதற்கு கலவையான விமர்சனங்களும் வரவேற்புகளும் எதிர்ப்புகளும் கிடைத்துள்ளன. மக்களின் முழுமையான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும், நிதிப்பற்றாக்குறையைச் சமாளிப்பது குறித்து தெளிவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
இதற்கிடையே நாளை சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய உள்ளார்.
ஒரு மாநிலத்தின் உணவு பாதுகாப்பிற்கும், கிராப்புற வாழ்வாதாரத்திற்கும் அடித்தளமாக விளங்குவது வேளாண்மை மற்றும் அதை சார்ந்த தொழிலாகும். வேளாண் துறைக்கு ஆண்டுதோறும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டாலும், தங்களின் அடிப்படைப் பிரச்னைகள் குறைந்தபாடில்லை என்றே விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர். அந்தவகையில் நாளை தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் சாகுபடியை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில் அரசு சிறப்பான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் விவசாயப் பயிர்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகுமா?, விதைப்புக் கால நிதி உதவி ரூ.15,000 அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
தவெகவின் தேர்தல் அறிக்கையில், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, விவசாயக் கடனில் பாதி, அதற்கு கீழ் நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு, கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தவெக அரசு பொறுப்பேற்றவுடன், 75,000 ரூபாய் வரையிலான கடன்கள் முழுமையாகவும், அதற்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு, 35,000 ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே நிலுவையில் உள்ள பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
மேலும், 2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில, மத்திய அரசு ஊழியராக இல்லாமல் இருக்கும்பட்சத்தில் அவர்களுடைய குழந்தைகளின் மருத்துவம் மற்றும் பொறியியல் தொழில்நுட்ப கல்வி முதல் அனைத்து வகை படிப்புகளுக்குமான முழு செலவையும் அரசே ஏற்கும் என்றும் தவெக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விவசாயப் பெருங்குடி மக்களின் பிள்ளைகளின் கல்விக் கனவுகளை நனவாக்கும் இந்த திட்டம் நாளைய பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் எதிர்பார்க்கும் முக்கிய கோரிக்கைகள் :
நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 3,500 ஆகவும், கரும்பு டன்னுக்கு ரூ. 5,000 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.
பால் கொள்முதல் விலையை எருமைப் பால் லிட்டருக்கு ரூ. 60, பசும்பாலுக்கு ரூ. 50 என உயர்த்தி வழங்கிட வேண்டும்.
அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் (கம்பு, காராமணி உட்பட) அரசே நேரடியாகக் கொள்முதல் செய்வதைக் கட்டாயமாக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.
உழவர்களுக்கு உரிமைத் தொகையாக ஆண்டுக்கு ரூ. 24,000 வழங்கிட வேண்டும். சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 15,000 உற்பத்தி மானியம் தரப்பட வேண்டும்.
அனைத்து வகை பயிர்களுக்கும் பின்னேற்பு மானியத்தை ரொக்கமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து ஏக்கருக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்க வேண்டும்.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த 3 கி.மீ. முதல் 10 கி.மீ. இடைவெளியில் தடுப்பணைகளைக் கட்ட வேண்டும்.
காவிரி - அய்யாறு இணைப்பு, காவிரி - பொன்னியாறு - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டங்களை விரைந்து தொடங்க வேண்டும்.
ரூ. 11,700 கோடி மதிப்பீட்டிலான 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தி காவிரியைப் பாதுகாக்க வேண்டும்.
இத்திட்டத்தின்கீழ் அனைத்து ஏரிகளையும் நிரப்பவும், பனமரத்துப்பட்டி ஏரியைத் தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தை 4 மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
வன விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும்:
காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும், பயிர் சேதத்திற்கு ரூ.50,000ம், தென்னை மர சேதத்திற்கு ரூ.10,000ம் (யானைகளால் சேதப்படுத்தப்பட்டால்), வீட்டு சேதத்திற்கு கான்கிரீட் வீட்டிற்கு ரூ. 4 லட்சமும்; குடிசை வீட்டிற்கு ரூ. 1 லட்சமும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மொத்த பட்ஜெட்டில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளுக்கு 25 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் மற்றும் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்.
பருவமழை மாற்றங்கள் மற்றும் உர விலை உயர்வைச் சமாளிக்க உரிய நிவாரணங்களும் கோரப்பட்டுள்ளன.
பயிர்க் காப்பீட்டு நிறுவனங்களை அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.
பொது பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய அறிவிப்புகள் இடம் பெறாத நிலையில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட்டில் நிதி நிலைமையை காரணம் காட்டி விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.