#BIG NEWS:அரசியல் சுயலாபத்திற்காக பரந்தூர் திட்டம் ரத்து? முதல்வர் விஜய்க்கு தங்கம் தென்னரசு கண்டனம்

அரசியலுக்கு காரணங்களுக்காக திட்டங்களை நிறுத்துவது ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சியையும் பாதிக்கும் என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று காலை 9.30 மணிக்கு கூடிய சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் ஆகிய துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் தொடங்கியது.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியதும் இன்று மறைந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். பெண்கள் பயன்பெறும் வகையில் அவர்களை முன்னேற்றும் வகையிலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. வரும் பொங்கல் தினத்தில் இருந்து அன்னபூரணி சூப்பர் 6 திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பட்டது.

அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், ‘பரந்தூரில் ஏர்போர்ட் (பரந்தூர் விமானநிலையம்) அமைப்பதை எதிர்த்து போராடும் மக்களுடன் நான் உறுதியுடன் நிற்கிறேன் என கூறியிருந்தேன்; விக்கிரவாண்டியில் அக்டோபர் 2024 நடந்த பொதுக் கூட்டத்திலேயே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறேன். நீண்ட நாட்களுக்கு மேலாக இந்த திட்டத்திற்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதன்படி ஏர்போர்ட் அமைக்கும் திட்டம் தவெக அரசால் கைவிடப்படுகிறது. புதிய விமானநிலையத்திற்கான இடம் பெரிதளவில் குடியிருப்பாளர், விவசாயிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். ஏற்கனவே நான் உறுதி அளித்தவாறு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும்’ என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் அறிவிப்பைத் தொடர்ந்து இது தொடர்பாக திமுக எம்எல்ஏ கேஎன்நேரு பேச முயன்ற போது அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டது. 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு குறித்து பேச அனுமதி இல்லை என சபாநாயகர் அறிவித்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். தவெக அரசுக்கு எதிராக சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பினர்.

பரந்தூர் விமானநிலையம்
பரந்தூர் விமானநிலையம்

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த திமுகவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘அரசியல் காரணங்களுக்காக பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யபட்டால், அது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்’ என்றார்.

பரந்தூர் விமான நிலையம் குறித்து 55 விதியிண் கீழ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருந்தோம். கவன ஈர்ப்பு தீர்மானம் இன்று ஏற்கப்படும் என கூறி இருந்தனர். முதலமைச்சர்110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டதால் பரந்தூர் விமான நிலைய குறித்து விவாதிக்க மறுத்துவிட்டனர். கவன ஈர்ப்பு தீர்மானத்தை சபாநாயகர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு சென்னையில் 2-வது விமான நிலையம் தேவை. பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியமானது. பரந்தூரில் ஏற்கனவே 90 சதவீத இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
பரந்தூர் விமான நிலையத்துக்காக விளைநிலம் எடுப்பு: விவசாயிகள் கதறல்!
தங்கம் தென்னரசு

பரந்தூர் விமான நிலையத்தை அமைப்பதற்காக ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒரு சில நபர்களுக்கு தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியமானது. சென்னையை சுற்றி மற்ற இடங்களில் விமான நிலையம் அமைவதில் சிக்கல்கள் உள்ளன. பல இடங்களில் ஆய்வு செய்த பின்னர்தான் பரந்தூரை விமான நிலையத்துக்காக தேர்வு செய்தோம். ஸ்ரீபெரும்புதூரில் அதிகளவில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால் பரந்தூர் விமான நிலையம் கட்டாய தேவையாக உள்ளது. பரந்தூர் விமான நிலையத்தை நம்பியே எலக்ட்ரானிக் நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வந்தன. பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டால் எத்தகைய பொருளாதாரா விளைவு ஏற்படும் என்பது குறித்து விவாதிக்க மறுத்துவிட்டனர். அரசியல் நோக்கம் தாண்டி செயல்படுவது அவசியம்.

இதையும் படியுங்கள்:
விவசாயமா? வளர்ச்சியா? - பரந்தூர் விவகாரத்தில் முதல்வர் எடுக்கப்போகும் முடிவு என்ன?
தங்கம் தென்னரசு

திமுக ஆட்சியில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது என்ற காரணத்துக்காக இந்த திட்டத்தை ரத்து செய்வது பொருளாதார வளர்ச்சியை தடுக்கும். ஏற்கெனவே ஓசூர் விமான நிலையத்தை இழந்துவிட்டோம். மீண்டும் பரந்தூர் திட்டத்தையும் இழந்தால் நாட்டின் தொழில் வளர்ச்சி எங்கே போகும் என்று தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com