மேட்ரிமோனி மோசடிகளுக்கு செக்.! இனி Matrimony தளங்களில் ஆதார் சரிபார்ப்பு கட்டாயம்: தமிழக அரசு அதிரடி

திருமண மோசடிகளைத் தடுக்க மேட்ரிமோனி தளங்களில் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் அடிப்படையிலான அடையாளச் சரிபார்ப்பை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
matrimony
matrimonyAI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

மேட்ரிமோனி (Matrimony) திருமண மோசடிகளைத் தவிர்க்க சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், புதிய விதிகள் மற்றும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, திருமணம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகையில் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை மேற்கொள்ள Matrimony.com நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆன்லைன் திருமண தகவல் இணையதளங்கள் மூலம் நடக்கும் பண மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுக்க, முறையான வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இதன்படி இணைய தளத்தில் வரும் விவரங்களைச் சரிபார்த்தல், மேட்ரி மோனி இணையதளங்களில் வரன் தேடுவோர் பதிவிடும் வயது, பிறந்த தேதி, முகவரி மற்றும் திருமண நிலை போன்ற அடிப்படைத் தகவல்களை, ஆவணங்கள் மூலம் கட்டாயம் சரிபார்த்த பிறகே இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, மேட்ரிமோனி (Matrimony.com) நிறுவனத்தின் இணையதளத்தில் உள்ள பயனர்களின் அடையாளத்தை உறுதி செய்து, நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், ஆள் மாறாட்டத்தைத் தடுக்கவும், திருமணம் தொடர்பான மோசடிகளை கட்டுப்படுத்தவும் ஆதார் அங்கீகாரத்தை தன்னார்வ அடிப்படையில் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆதார் மூலம் வெற்றிகரமாகச் சரிபார்க்கப்படும் சுயவிவரப் பக்கங்களில் சரிபார்க்கப்பட்டதற்கான பிரத்யேகக் குறியீடு (Visual indicator) காட்டப்படும். அதாவது பயனர்களின் சுயவிவரங்களில் சரிபார்க்கப்பட்ட பயனர் என்பதைக் குறிக்கும் வகையில் Yes/No அல்லது e-KYC ஆகிய அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இதற்கான உத்தரவை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேட்ரிமோனி தளத்தை பயன்படுத்தும் நபர்களின் அடையாளத்தை உறுதி செய்ய ஆதார் அங்கீகாரம் தன்னார்வ அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

மேட்ரிமோனி|ஆதார் சரிபார்ப்பு
மேட்ரிமோனி|ஆதார் சரிபார்ப்புAI image

ஆதார் எண்ணை பயன்படுத்தி சரிபார்ப்பு மேற்கொள்ளும் முன்பு, சம்பந்தப்பட்ட ஆதார் எண் வைத்திருப்பவரின் ஒப்புதலை Matrimony.com நிறுவனம் பெற வேண்டும்.

ஆதார் அங்கீகாரம் அளிக்க விருப்பம் இல்லாத பயனர்கள் மாற்று அடையாள ஆவணங்களாக ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், நிரந்தரக் கணக்கு எண் (PAN) அட்டை ஆகியவற்றை அடையாள ஆவணமாக அளிக்க வேண்டும்.

பயனர்களின் சுயவிவரங்களில் சரிபார்க்கப்பட்ட அடையாளக் குறியீட்டை ஏற்படுத்துதல், ஆள்மாறாட்டத்தைத் தடுப்பது மற்றும் திருமணம் தொடர்பான மோசடிகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக ஆதார் அங்கீகாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆதார் பயனர்களுக்கு குட் நியூஸ்: இனி 6 மாதத்திற்கு கட்டணமே கிடையாது!
matrimony

ஆதார் அங்கீகாரம் தன்னார்வ அடிப்படையிலானது என்பதால், அதனை மேற்கொள்ளாத காரணத்திற்காக எந்தவொரு சேவையையும் பயனர்களுக்கு மறுக்கக் கூடாது.

மேலும், ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள மறுக்கும் அல்லது செய்ய முடியாத பயனர்களுக்கு மாற்று மற்றும் நடைமுறைக்கு ஏற்ற அடையாள ஆவணங்களை நிறுவனம் வழங்க வேண்டும். ஆதார் சரிபார்ப்பு செய்ய மறுத்ததற்காகவோ அல்லது அதை மேற்கொள்ள முடியாததற்காகவோ பயனர்களுக்கு சேவையை மறுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேட்ரிமோனி இணைய தளங்களில் போலி கணக்குகளை தடுப்பது மற்றும் திருமணம் தொடர்பான மோசடிகளை கட்டுப்படுத்துவதும் நோக்கில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டு உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
விவசாயிகளுக்கு குட் நியூஸ்: மேட்டூர் அணை திறக்கும் தேதியை அறிவித்தது தமிழக அரசு!
matrimony

அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com