

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir urimai thogai) திட்டத்தை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்ததும் கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்திய இத்திட்டத்தை நிறுத்தாமல் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் (Kalaignar Magalir Urimai Thogai-KMUT)கீழ், தமிழ்நாடு அரசு, தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறது. ஏழை பெண்கள் பொருளாதார ரீதியாக வாழ்வில் உயர கொண்டு வரப்பட்ட கலைஞர் உரிமை திட்டம் மக்களால் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குடும்பத் தலைவிகளின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வதற்காகவும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. செப்டம்பர் 15, 2023 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பிப்ரவரி 2026 நிலவரப்படி சுமார் 1.31 கோடி பெண்களை பயனாளிகளாகக் கொண்டுள்ளது.
இதனிடையே நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், தமிழக மக்களின் பேராதரவுடன் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள விஜய், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த 10-ம்தேதி முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.
இதனால் முந்தைய திமுக அரசால் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் தடையின்றி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் கடந்த மாதம் எப்போதும் போல் மே 15-ம்தேதியன்று பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. ஆனால் தவெக தேர்தல் வாக்குறுதி கொடுத்தபடி 2500 ரூபாய் கொடுக்கப்படவில்லை.
அதாவது முதலமைச்சர் விஜய், முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் இந்த ஆட்சியிலும் தொடரும் என்று உறுதியளித்தபடி மகளிர் உரிமைத் தொகை வரவுவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தவெக தேர்தல் வாக்குறுதியாக மதிப்புமிக்க மகளிர் திட்டத்தின்கீழ் மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் அந்த தொகை கொடுக்கப்படவில்லை. தவெக தேர்தல் அறிக்கையாக அறிவித்த ரூ.2055 கட்டாயம் கொடுக்கப்படும் எனவும் மக்கள் தங்களுக்கு காலவகாசம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் கேட்டிருந்தார்.
இதையடுத்து சமீபத்தில் ரூ.2500 எப்போது கொடுக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மரியவில்சன், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சீரமைக்கும் பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளதாகவும், தகுதியில்லாதவர்களுக்கும் இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மறுசீரமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் இத்திட்டத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத பயனாளிகள் அனைவரும் இத்திட்டத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார்கள் என்றே தெரிகிறது.
அதேபோல் தவெக தேர்தல் வாக்குறுதியில் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் 60 வயதுக்கும் மேற்பட்ட பயனாளிகளின் பெயர்களும் நீக்கப்படலாம் என்றே தெரிகிறது.
அந்த வகையில் வடமாநிலத்தவர்கள், உரிய தகுதிகளை பெறாதவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டு, மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகப்பெரிய அளவில் மறுசீரமைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலுக்குப் பிறகு இந்த நடவடிக்கை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.