

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை 2500 ரூபாயாக எப்போது உயர்த்தி தரப்படும் என்று பெண்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், அது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ள கருத்து அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஏழை பெண்கள் பொருளாதார ரீதியாக வாழ்வில் உயர கொண்டு வரப்பட்ட கலைஞர் உரிமை திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பத் தலைவிகளின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வதற்காகவும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. 2023 செப்டம்பர் 15-ம்தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இதுவரை சுமார் 1.31 கோடி பெண்களை பயனாளிகளாக உள்ளனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.
தேர்தலில் போது தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மகளிருக்கான உரிமைத் தொகை 1000 ரூபாயில் இருந்து 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது தேர்தல் நெருங்கிய நிலையில், திமுக மற்றும் அதிமுக சார்பில் தற்போது வழங்கப்படும் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தவெக சார்பில் 60 வயது வரை உள்ள அனைத்து மகளிர்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.
இந்நிலையில் தவெக ஆட்சி அமைந்து சுமார் மூன்று மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் மகளிர் உரிமைத் தொகை வாங்குபவர்களும், அதற்காக விண்ணப்பித்துள்ள பெண்களும் எப்போது 1000 ரூபாயில் இருந்து 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் பட்ஜெட்டில் அதற்காக அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.
தவெக ஆட்சியின் முதல் பொதுப் பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், 'மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500-ஆக உயர்த்தப்படும்' என்ற அறிவிப்பைத் தனது முதல் பட்ஜெட்டிலேயே முதலமைச்சர் விஜய் வெளியிடுவார் என்று பெண்கள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்திருந்தது.
இதற்கிடையே, தமிழகத்தில் நிதி நிலைமை மோசமாக இருப்பதாகவும், சுமார் 10 லட்சம் கோடி கடன் இருப்பதால் இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என கேள்வி எழுந்திருந்தது.
இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ள கருத்து அனைவரையும் ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் செங்கோட்டையனிடம் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், தமிழகம், 13 லட்சம் கோடியே 32 லட்சம் ரூபாய் கடனில் உள்ளது. இவற்றை சரிசெய்ய கால அவகாசம் தேவைப்படுகிறது. முந்தைய திமுக அரசு தங்களது வாக்குறுதியான ரூ.1,000 தொகையை உடனடியாக வழங்காமல் இரண்டரை ஆண்டுகள் கழித்துத்தான் வழங்கியது என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், எங்களை மட்டும் ஏன் இப்போதே கேட்கிறீர்கள் என்றார்.
இதன்மூலம், வரும் பட்ஜெட்டில் ரூ.2,500 அறிவிப்பு வெளியாவது சந்தேகம் தான் என்கின்றனர்.
பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பெண்களுக்கு அமைச்சர் செங்கோட்டையனின் இந்த கருத்து அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.