தமிழ்நாட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் நடப்பு நிதியாண்டின் முதல் பாதிக்கான சொத்து வரி மற்றும் தொழில் வரியை வரும் செப்டம்பர் 30-ம்தேதிக்குள் நிலுவையின்றி செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுவாக, உள்ளாட்சி அமைப்புகளில் வரி செலுத்துவதை ஊக்குவிக்கவும், குறித்த காலத்திற்குள் வசூலை முடிக்கவும் இத்தகைய அறிவிப்புகள் நகராட்சி நிர்வாகத் துறையால் வெளியிடப்படுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய சொத்து வரியினையும், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களைச் சார்ந்த பணியாளர்களின் தொழில் வரியினையும் மாநகராட்சிக்கு வரும் செப்டம்பர் 30-ம்தேதிக்குள் செலுத்த வேண்டும்.
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998-ன் பிரிவு 117-ன் படி, பணியாளர்களின் ஊதியத்திலிருந்து தொழில் வரியினை பிடித்தம் செய்து பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்துவது அந்நிறுவனங்களின் சட்டபூர்வ கடமையாகும். அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொழில் வரியினை வரும் செப்டம்பர் 30-ம்தேதிக்குள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டும்.
தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ், 25 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள், 479 பேரூராட்சிகள் உள்ளது. பொதுவாக சொத்து வரி இரண்டு அரையாண்டுகளாக வசூலிக்கப்படுகிறது. முதல் அரையாண்டுக்கு செப்டம்பர் 30 வரையும், இரண்டாவது அரையாண்டுக்கு மார்ச் 31 வரையும் கால அவகாசம் இருக்கும்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரியைச் செலுத்த தவறும் பட்சத்தில், அக்டோபர் 1 முதல், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 268 (3)ன் படி, நிலுவைத் தொகைக்கு தனி வட்டி (Penal Interest) வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
அதாவது, நீங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து வரியைச் செலுத்தவில்லை என்றால், அதற்கு மாதத்திற்கு 1% எளிய வட்டி (Simple Interest) அபராதமாக விதிக்கப்படும்.
அதேசமயம், சமீபத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த புதிய சட்டத்திருத்தத்தின்படி, ஒரு நிதியாண்டு முடிந்த பிறகும் சொத்து வரி செலுத்தப்படாமல் இருந்தால், அந்த நிலுவைத் தொகைக்கு 0.5% வட்டி விதிக்கப்படும் வகையில் விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அரையாண்டும் தொடங்கிய முதல் 30 நாட்களுக்குள் (அதாவது ஏப்ரல் 30 மற்றும் அக்டோபர் 30-க்குள்) சொத்து வரியை முன்கூட்டியே செலுத்தினால் 5% தள்ளுபடி (அதிகபட்சம் ₹5,000 வரை) ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
நீண்ட நாட்களாகச் சொத்து வரியைச் செலுத்தாமல் இருந்தால், நகராட்சி அல்லது மாநகராட்சி மூலம் சொத்துக்களை ஜப்தி (Attachment) செய்தல் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும், சொத்தை விற்கவோ அல்லது அதன் மீது வீட்டுக் கடன் பெறவோ தேவையான 'குடிநீர் மற்றும் சொத்து வரி நிலுவையின்மை சான்றிதழ்' (No Dues Certificate) பெற முடியாது.
உங்கள் வரியை ஆன்லைனில் செலுத்த மற்றும் துல்லியமான நிலுவைத் தொகையை அறிய TN Urban ePay அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.
பொதுமக்கள் நெரிசலைத் தவிர்க்கவும், எளிதாக வரியைச் செலுத்தவும் பல்வேறு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆன்லைன் இணையதளங்கள்:
அதன்படி, சென்னை வாசிகள் சென்னை மாநகராட்சி இணையதளம் (chennaicorporation.gov.in) மூலமாகவும், தமிழ்நாட்டின் பிற பகுதி மக்கள் டிஎன் அர்பன் இ-பே (TN Urban E-Pay) தளம் மூலமாகவும் ஆன்லைனில் சொத்து வரி மற்றும் தொழில் வரியை செலுத்தலாம்.
'Namma Chennai' செயலி அல்லது பிற UPI செயலிகள் (Paytm, PhonePe போன்றவை) மூலம் செலுத்தலாம்.
மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், அரசு இ-சேவை மையங்கள் மற்றும் நியமிக்கப்பட்ட வங்கி வசூல் மையங்கள் மூலமாகவும் செலுத்தலாம்.
எனவே பொதுமக்கள் காலம் தாழ்ததாமல் உங்களது சொத்து வரி நிலுவைகளைக் கண்டறிந்து, அபராதத்தைத் தவிர்க்க வரும் நாளைக்குள் (செப்டம்பர் 30-ம்தேதி) வரியைச் செலுத்திவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இதற்கிடையே மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், சொத்து வரி உள்ளிட்ட சில வரிகளை உயர்த்துவது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது.
சென்னை மாநகராட்சியில், 2025ம் ஆண்டில் 1, 765 கோடி ரூபாய் சொத்து வரி வசூலானது. அதேபோல, இதர மாநகராட்சிகளில், 1814.59 கோடி, நகராட்சிகளில், 646.62 கோடி, பேரூராட்சிகளில் 311.62 கோடி ரூபாய் வசூலானது. ஆனாலும், வரவை விட செலவு அதிகமாக இருப்பதால், கடுமையான நிதி நெருக்கடியில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் சிக்கித் தவிக்கின்றன.
எனவே, சொத்து வரியை சீராக்க, 100 சதவீதம் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின் ஆண்டுக்கு, 6 முதல் 10 சதவீதம் உயர்த்த, அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.