.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
தமிழ்நாட்டில் வருகின்ற அக்டோபர் 18-ம் தேதி ஆயுத பூஜை மற்றும் அக்டோபர் 19-ம் தேதி விஜய தசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பண்டிகையை சிறப்பாக கொண்டாட சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊருக்குச் செல்ல சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
தொடர் விடுமுறையில் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை சிரமமின்றி வாங்குவதற்கு தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. இதன்படி வருகின்ற அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆயுத பூஜைக்கு முந்தைய தினமான ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 18) அன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ரேஷன் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாகும். ஆனால் பொதுமக்களின் வசதிக்காக இம்முறை ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்பட உள்ளன.
பண்டிகை காலங்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை தினங்களில் ரேஷன் கடைகள் இயங்குவது அவ்வப்போது நடக்கக் கூடிய செயல் தான். இதற்குப் பதிலாக வேலை நாட்களில் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும்.
தற்போது விலைவாசி உயர்ந்து வரும் சூழலில், தொடர் விடுமுறை காரணமாக ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமையில் இயங்குவது சாமானிய மக்களுக்கு பேருதவியாக இருக்கும். அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த விநியோகத்தில் எவ்வித கால தாமதமோ அல்லது தட்டுப்பாடோ ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவே ஞாயிற்றுக்கிழமையில் ரேஷன் கடைகளை இயக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என்பதால், அதற்கு பதிலாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாற்று விடுமுறை விரைவில் அறிவிக்கப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கான வசதி:
வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சொந்த ஊர் அல்லது வெளியூர் செல்லத் திட்டமிட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள், ஞாயிற்றுக்கிழமை வேலைநாளை பயன்படுத்தி தங்களுக்குரிய பொருட்களை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளலாம்.
வேலை காரணமாக வார நாட்களில் ரேஷன் கடைக்கு செல்ல முடியாதவர்கள் இந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்களை எளிதாக வாங்கிக் கொள்ளலாம்.
ஆயுத பூஜையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டவர்கள், ஊருக்கு செல்வதற்கு முன்கூட்டியே தங்களுக்கான மாதாந்திர ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
பண்டிகை கால விடுமுறை முடிந்த பின், ஒரே நாளில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுவதைத் தவிர்க்கவும், நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் இது உதவும்