

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு பிரச்சினை அதிகமாக இருந்தது. தற்போதுவடகிழக்கு பருவமழை காணமாக மின் தட்டுப்பாடு ஓரளவு குறைந்துள்ளது. இருப்பினும் கூட மின்சாரப் பற்றாக்குறையைப் போக்க தனியாரிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்ய முடிவு செய்தது தமிழக அரசு.
இந்நிலையில் மின்சார தட்டுப்பாட்டைக் குறைக்க வீடுகளில் சோலார் பேனல்களை நிறுவுவது நல்ல தீர்வாக இருக்கும். இருப்பினும் இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. இந்நிலையில் சோலார் பேனல்களை அமைப்பதில் விதிக்கப்படும் சில கட்டணங்ளுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
2027 மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் வீடுகளில் சோலார் பேனல்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை 35,000 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் சோலார் பேனல்கள் அமைப்பதை ஊக்கப்படுத்த மானியம் மட்டுமின்றி, கட்டண விலக்கு அளிக்கப்பட உள்ளது.
வீட்டில் சோலார் பேனல்களை அமைக்க மத்திய அரசு பி.எம். சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜனா என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் படி ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குகிறது அரசு. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு மானியம் கிடைத்த பிறகு, மாநில அரசு மானியம் தானாகவே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
சோலார் பேனல்களை நிறுவுவதன் மூலம் தமிழ்நாட்டின் மின் தேவை குறையும். இதனை முன்னிறுத்தி சோலார் பேனல்களை அதிகளவில் நிறுவ மக்கள் முன்வர வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது.
இதன் காரணமாக நுகர்வோரின் செலவைக் குறைப்பதற்காக விண்ணப்பக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணம் மற்றும் இருவழி மீட்டர் செலவு உள்ளிட்ட கட்டணங்களுக்கு விலக்கு அளித்து, இலவச சேவை வழங்க முடிவு செய்யப்பட்டது. இதுதவிர ஒருமுனை மின் இணைப்பை (Single Phase) மும்முனை மின்சாரமாக (Three Phase) மாற்றுவதற்கான கட்டணத்திற்கும் விலக்கு அளிக்கப்பட உள்ளது.
மின் தேவையை 10 கிலோ வாட் வரை உயர்ததுவதற்கான கட்டணமும் இலவசமாக்கப்பட உள்ளது. இந்தக் கட்டண விலக்கு குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்ததும், நடப்பாண்டு இறுதிக்குள் கட்டண விலக்கு முறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சோலார் பேனலை ஒருமுறை நிறுவி விட்டால், பல ஆண்டுகளுக்கு மின் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமே இருக்காது. தமிழ்நாட்டில் ஏற்கனவே சில வீடுகளில் மட்டும் தான் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒருமுறை செய்யும் செலவுக்கு பல ஆண்டுகள் பலன் கிடைக்கும் என்பதால், பொதுமக்கள் சோலார் பேனலை நிறுவினால் வருங்காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது.
மத்திய, மாநில அரசுகள் இதற்கு மானியம் வழங்கினாலும், சில கட்டணங்கள் விதிக்கப்படுவதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இந்நிலையில் தான் நுகர்வோரின் செலவைக் குறைக்க கட்டணங்களுக்கு விலக்கு அளிக்கும் முடிவு எடுக்கபப்ட்டுள்ளது.
இருப்பினும் இது அமலுக்கு வந்த பிறகே நுகர்வோரின் செலவு குறையும். கட்டண விலக்கு முறை அமலுக்கு வருவதற்கு முன்பே, சோலார் பேனலை நிறுவ விண்ணப்பிக்கும் நுகர்வோருக்கு இந்தக் கட்டண விலக்கு பொருந்தாது