

இந்தியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அரிசி, மளிகை மற்றும் உணவுப் பொருள் விலைகளில், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள் மற்றும் தக்காளி, பூண்டு போன்ற சில காய்கறிகளின் விலைகள் தொடர்ந்து உயர்ந்தே காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே அரிசி, மளிகை பொருட்களின் விலை திடீரென அதிகரித்து, பல்வேறு தரப்புகளில் இருந்து குரல்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக கடந்த சில வாரங்களாக அரிசி மற்றும் மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ. 20 முதல் ரூ. 30 வரை கிடுகிடுவென உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு முன்வந்து ஏழை, நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்கும் அரிசி விலை உயர்வைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
உற்பத்தி குறைவு, பிற மாநிலங்களில் இருந்து வரத்து பாதிப்பு மற்றும் பதுக்கல் போன்ற காரணங்களால் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திரச் செலவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அரிசியின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாமல் போனதும் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்து வரத்து குறைந்ததுமே இதற்கு காரணம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தச் சில வியாபாரிகள் பதுக்கலில் ஈடுபடுவதும் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.
1,400 ரூபாய்க்கு விற்பனையான 25 கிலோ மூட்டை அரிசி இன்று 1,700 முதல் 1,800 ரூபாய் வரை விற்பனையாகிறது. அடுத்தடுத்த வாரங்களில் இது மேலும் அதிகரிக்கும் என அரிசி வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பருவத்துக்கு ஏற்ப விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்றாலும் தற்போது உள்ள அளவுக்கான விலை உயர்வு இருந்ததில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த விலை உயர்வு தற்காலிகமானது தான். தமிழ்நாட்டில் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் தொடக்கத்தில் குறுவை சாகுபடி வருகிறபோது விலை சமநிலை அடைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
விலை உயர்வு விவரங்கள் (மளிகை விலை)
பொன்னி புழுங்கல் அரிசி: கடந்த ஜூன் மாதத்தை விட, கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 9 முதல் ரூ. 20 வரை உயர்ந்துள்ளது.
சன்னரக அரிசி: முன்பு ரூ. 64-க்கு விற்கப்பட்ட சன்னரக அரிசி தற்போது ரூ. 75 வரை விற்கப்படுகிறது.
கர்நாடக பொன்னி அரிசி: ரூ. 65-ல் இருந்து ரூ. 80 வரை விலை அதிகரித்துள்ளது.
இட்லி அரிசி: கிலோ ரூ. 43-ல் இருந்து ரூ. 50 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடக பொன்னி அரசி: 65 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில், அது மேலும் 15 ரூபாய் விலை உயர்ந்து 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
குண்டு மிளகாய்: கிலோ ரூ. 260-ல் இருந்து ரூ. 320 வரை விற்கப்படுகிறது.
நீட்ட மிளகாய், 280 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் ஒரு கிலோ தனியா ரூ.160க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரே மாதத்தில் 110 ரூபாய் அதிகரித்து தற்போது ரூ.250 விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் ஒரு கிலோ பூண்டு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ புளி 180 ரூபாயில் இருந்து 200 ரூபாயும், உளுத்தம் பருப்பு 120 ரூபாயில் இருந்து 150 ரூபாயும் அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ கடலைப்பருப்பு 80 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ துவரம் பருப்பு 130 ரூபாயில் இருந்து 140 ரூபாயும், சர்க்கரை 41 ரூபாயில் இருந்து 51 ரூபாயும் அதிகரித்துள்ளது.
சூரியகாந்தி எண்ணெய் (Sunflower Oil): ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூலை மாதத்தில் இதன் விலை 5% முதல் 6% வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இதன் சில்லறை விற்பனை விலை தோராயமாக ஒரு லிட்டர் ரூ.140 முதல் ரூ.175 வரை உள்ளது. பாமாயில் (Palm Oil)லிட்டருக்கு தோராயமாக ரூ.90 முதல் ரூ.140 வரையிலும் பிராண்டுகளுக்கு ஏற்ப விற்கப்படுகிறது.
அரிசி விலை உயர்ந்த நிலையில் தற்போது எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், பொது மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இதற்கிடையே ஒவ்வொரு மாதமும் 1-ம்தேதி HPCL, BPCL மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனங்கள் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் திருத்தங்களை செய்கின்றன. அந்த வகையில் ஆகஸ்ட் 1-ம்தேதி வரும் அறிவிப்பில் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் உயரும் பட்சத்தில் நடுத்தர மற்றும் சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட் கடுமையாக பாதிக்கப்படும்.
நடுத்தர மக்கள் அவசர தேவைக்காக சேர்த்து வைக்கும் பணத்தை அன்றாட உணவுச் செலவிற்காக எடுக்க வேண்டியிருக்கும்.