
தமிழ்நாட்டில் வரும் டிசம்பர் 11 முதல் கனமழை பெய்யவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
சமீபத்தில் வந்த ஃபெஞ்சல் புயலால் கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் வந்தாலே வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் ஃபெஞ்சல் புயல் தமிழகத்தை புரட்டி எடுத்ததே என்று சொல்லலாம். எப்போதும் சென்னையை வெளுத்து வாங்கும் புயல், மழை இந்த முறை வேறு இடத்திற்கு சென்றது. அப்பாடா இந்த முறை தப்பித்துவிட்டோம் என நினைத்த சென்னை மக்களுக்கு அடுத்த ஆப்பு வருவதாக வெதர் மேன் கணித்துள்ளார். அதாவது வரும் டிசம்பர் 11 முதல் ஆட்டம் ஆரம்பிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
இதுவரை சென்னை வெள்ளத்தால் சிக்கி பலரும் அவதிக்குள்ளாகும் நிலையில், மழை என்றாலே அச்சம் வரும் அளவிற்கு நடுங்கி வருகின்றனர். எப்படியோ ஃபெஞ்சலிடம் இருந்து தப்பித்த மக்களை இந்த மழை என்ன செய்யபோகிறது என்று பார்க்கலாம்.
இந்நிலையில் தான் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 11 ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து டிசம்பர் 11 முதல் டிசம்பர் 14ஆம் தேதி தமிழ்நாட்டில் கனமழை வெளுக்கும் என பிரதீப் ஜான் கணித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகத்தில் டெல்டாவின் வட கடலோர மாவட்டங்கள் முதல் காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 11 மற்றும் 12ம் தேதிகளிலும், தென்மாவட்டங்கள் மற்றும் உள்தமிழக மாவட்டங்களி்ல 13 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் மழை பெய்ய உள்ளது.
அதேபோல் டிசம்பர் 11 மற்றும் 12 ம் தேதிகளில் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி கடற்கரை பகுதிகளிலும் கனமழை என்பது பெய்யும். தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்றால் அதற்காகான வாய்ப்பு மிக குறைவு தான். இதனால் பெஞ்சல் புயல் போன்ற பாதிப்பு ஏற்படாது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக்கான மழையின் அளவு 500 மில்லிமீட்டரை தாண்ட வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னை மட்டும் மீண்டும் ஒருமுறை 1000 மில்லிமீட்டர் மழையை தொட வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடல் வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை கொந்தளிப்பாக இருக்கலாம என்று தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் ஃபெஞ்சல் அளவுக்கு இல்லையென்றாலும், கனமழை பெய்யும் என கூறுகிறார். இதனால் மக்கள் அடுத்த மழைக்கு தயாராகி கொள்ளுங்கள்.