

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானங்களில் விலை உயர்த்தப்படாது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் டாஸ்மாக் ஊழியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மதுபான விலை உயர்த்தப்படுமா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு, சம்பள உயர்வுக்கும் விலை உயர்வுக்கும் சம்பந்தமில்லை. மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள் உயர்த்தப்பட்டாலும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித கூடுதல் நிதிச் சுமையோ, விலை உயர்வோ இருக்காது என்றார்.
டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கும் பிரச்னை இன்னும் தொடருகிறது, பாட்டிலுக்கு மேல் கூடுதலாக வசூலித்தால், அதாவது மதுபாட்டில்களை எம்ஆர்பி விலைக்கு மேல் விற்கும் ஊழியர் பணிநீக்கம் செய்யப்படுவர் என்றார்.
ஊழியர்களுக்கு எங்களுடைய வேண்டுகோள் என்னவென்றால், எப்படி இத்தனை ஆண்டுகள் இல்லாமல் இப்போது 25% எப்படி ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டதோ, அதேபோல் அரசு நிர்ணயித்த தொகைக்கு மேல் மதுபானங்கள் விற்பனை செய்தால் நடவடிக்கையும் இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த தவறுக்கு முதலில் அபராதம் இருந்தது. பின்னர் அது சஸ்பெண்ட்டாக மாற்றப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் இந்த குற்றத்தை தொடர்ந்து செய்யும் ஊழியர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் விக்னேஷ் உறுதியளித்தார்.
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிப்பது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் அந்த அறிவிப்பினை அமைச்சர் விக்னேஷ் விடுத்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியின்மீது தவெக தலைவர் விஜய் வைத்த முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று ‘பாட்டிலுக்கு ரூபாய் பத்து’. அதாவது அரசின் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கப்படுவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
தவெக ஆட்சி அமைந்தும் பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதுபோன்று பணம் பெறுபவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர்கள் உள்ளிட்ட எச்சரிக்கைகள் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு தரப்பில் விடுக்கப்பட்டது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள் தங்களுக்கு வெறும் ரூ.11 ஆயிரம்தான் மாத ஊதியம் என்றும், இதனால்தான் தாங்கள் கூடுதலாக ரூ.10 பெறுவதாகவும் பல்வேறு காரணங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் முதலமைச்சர் விஜய், டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்னைகளை கருத்தில்கொண்டு அவர்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்க கூறியுள்ளார். அதன்படி உதவி விற்பனையாளருக்கு ரூ.14,340லிருந்து ரூ. 17,925 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும்.
விற்பனையாளர்களுக்கு ரூ.15,530லிருந்து ரூ.19,413 ஆகவும், மேற்பார்வையாளருக்கு ரூ.17850லிருந்து, ரூ.22,313ஆகவும் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இந்த ஊதிய உயர்வு அடுத்த மாதம் முதல்அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை டாஸ்மாக் துறையில் இந்தளவு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 110.74 கோடி ரூபாய் கூடுதலாக அரசுக்கு செலவு ஆகும்.
அதேசமயம், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் முறையைத் தடுக்க, அரசு காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை (buy-back scheme) மறுசீரமைத்து வருகிறது.
இதற்கிடையே தமிழகத்தில், மதுபானம் விலையை உயர்த்துவது குறித்து, நேற்று, 'டாஸ்மாக்' நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில், மது கடைகளில் மதுக்கூடம் நடத்துவதற்கான ஒப்பந்தம், கடந்த மாதம் 30ம் தேதி முடிந்த நிலையில், கூடுதலாக இரு மாதங்களுக்கு அவகாசம் அளிக்க முடிவு செய்யப்பட்டதுடன், மது வகைகளின் விலையை உயர்த்துவது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், மது கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய வயதை 60 ஆக உயர்த்தும் அறிவிப்பை, வரும் சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பில் வெளியிட, ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியான நிலையில் இன்று ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.