புது கார் வாங்கும் பிளான் இருக்கா? உடனே முந்துங்க! – டிசம்பர் 1 முதல் எகிறப் போகும் கார் விலை..!

வரும் டிசம்பர் 1 முதல் ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட கார் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.
car price hike|கார் விலை
car price hike|கார் விலைAI image
கவிதா பக்கிள்

கவிதா பக்கிள், பிரபல நாளிதழில் 14 ஆண்டுகள் Content Writer-ஆகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கல்கி ஆன்லைனில் செய்திகள், விளையாட்டு, சினிமா, கலை, ஆன்மிகம், யோகா ஆகிய பிரிவுகளில் வாசகர்களுக்குப் பயனுள்ள கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on: 

சமீபகாலமாக அதிகரித்து வரும் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திச் செலவுகளைக் காரணம் காட்டி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் வரும் டிசம்பர் 1 முதல் தங்கள் கார்களின் விலையை உயர்த்த உள்ளன. ஆடி நிறுவனம் ஜனவரி 2027 முதல் விலை உயர்வை அமல்படுத்த உள்ளது.

டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ் லிமிடெட் (TMPV), எலெக்ட்ரிக் வாகனங்கள் உட்பட தனது அனைத்து கார்கள் மற்றும் எஸ்யூவி (SUV) வகை வாகனங்களின் விலையும் வரும் (கார் விலை) டிசம்பர் 1 முதல் உயர்த்தப்படுவதாக அறிவித்ததுள்ளது. இதன் மூலம், கார்கள், எஸ்யூவிகள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சராசரியாக 0.5% வரை உயர்த்தப்படுகிறது.

மேலும் உண்மையான இந்த விலை திருத்தம், மாடல்கள் மற்றும் வேரியண்ட்களுக்கு (Variants) ஏற்ப மாறுபடும். (உதாரணமாக, தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலையின் அடிப்படையில் சுமார் ₹2,400 முதல் ₹15,000 வரை உயர வாய்ப்புள்ளது).

பெட்ரோல், டீசல் (ICE) வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் (EV) உட்பட டாடாவின் அனைத்துப் பயணிகள் வாகனங்களுக்கும் (Tiago, Punch, Nexon, Curvv, Harrier, Safari மற்றும் அவற்றின் EV மாடல்கள்) இந்த விலை உயர்வு பொருந்தும். உற்பத்திச் செலவுகள் (Input costs - குறிப்பாக எஃகு, தாமிரம் போன்ற மூலப்பொருட்களின் விலை) தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதன் சுமையைப் பகுதியளவு ஈடுகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும்பகுதி செலவு உயர்வை நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் அதிகரித்து வரும் செலவுகளால், குறிப்பிட்ட கார் மாடல் மற்றும் வேரியன்ட்களின் விலையை வரும் டிசம்பர் 1 முதல் அதிகபட்சம் ரூ. 8,000 வரை உயர்த்த உள்ளதாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

விலை உயர்வின் அளவு மாடலை பொறுத்து மாறுபடும் என்றும் கூறியுள்ளது. இந்த சமீபத்திய விலை உயர்வானது, நடப்பு ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் அமல்படுத்தியுள்ள 1.4 சதவீத விலை உயர்வுடன் கூடுதலாக இருக்கும். கடந்த செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட 0.4 சதவீத விலை உயர்வும் இதில் அடங்கும்.

இரண்டாம் காலாண்டில் அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலையானது ஹூண்டாயின் லாபத்தை பாதித்துள்ளது. இதன் விளைவாக லாப வரம்பு 13.9 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதமாகக் குறைந்தது. இதனையடுத்து 2வது காலாண்டில், வாகன உற்பத்தியாளரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு கிட்டத்தட்ட 24 சதவீதம் சரிந்தது.

ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களை தொடர்ந்து ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவும் புதிய விலை மாற்றங்களை அறிவித்துள்ளன.

Hyundai and Tata Motors
Hyundai and Tata Motorsimage credit-iStock, Pinterest

வரும் 2027 ஜனவரி 1 முதல் தனது அனைத்து மாடல் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலையையும் 2 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகள், மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் நாணய ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றால் இந்த விலை உயர்வை ஆடி நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 2026-லும் ஆடி நிறுவனம் இதேபோல 2 சதவீதம் வரை விலையை உயர்த்தியிருந்தது. தொடர்ந்து பல ஆடி மாடல்களின் விலைகள், மாடல் மற்றும் வேரியன்ட்டைப் பொறுத்து ரூ. 44,000 முதல் ரூ. 1.72 லட்சம் வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
GST வரியில் வரப்போகும் மாற்றம்.. அடியோடு மாறும் விலை... கார், பைக்குகளின் விலை குறைய வாய்ப்பு?
car price hike|கார் விலை

வாகன உற்பத்தியாளர்கள் அதிகரித்து வரும் உள்ளீட்டுச் செலவுகளைச் சமாளிக்கப் போராடி வரும் நிலையில், தொடர்ச்சியான செலவு நெருக்கடிகளைக் காரணம் காட்டி, மாருதி சுசுகி நிறுவனம் விலை உயர்வை அறிவித்த நிலையில் சில நாட்களில், டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் ஆடி (Audi) ஆகிய முன்னணி கார் நிறுவனங்களும் தங்கள் வாகனங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

மாருதி சுசுகி நிறுவனம் 2026-ஆம் ஆண்டில் நான்காவது முறையாக (நவம்பர் 22 முதல்) தேர்ந்தெடுக்கப்பட்ட 14 மாடல்களின் விலையைச் சராசரியாக 0.31% உயர்த்தியுள்ளது.

இன்விக்டோ (Invicto) மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.25,000 வரையும், ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஜிம்னி மற்றும் விக்டோரிஸ் ஆகிய மாடல்களுக்கு ரூ.10,000 வரையும் விலை உயர்ந்துள்ளது.

ஙபிரெஸ்ஸா மற்றும் எர்டிகா மாடல்களுக்கு ரூ.5,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு மத்தியிலும், நவம்பர் மாத விற்பனையை ஊக்குவிக்க மாருதி சுசுகி தனது அரீனா (Arena) வரிசை கார்களுக்கு ரூ.1.40 லட்சம் வரையிலான தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் சலுகைகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தில் சாலை வரியை உயர்த்த மாநில போக்குவரத்து துறை முடிவு! உயரும் கார்,பைக் விலை!
car price hike|கார் விலை

வரும் டிசம்பர் 1 முதல் குறிப்பிட்ட கார்களின் விலை உயர உள்ளதால், நீங்கள் கார் வாங்கத் திட்டமிட்டிருந்தால், நவம்பர் 30-ம்தேதிக்குள் முன்பதிவு (Booking) அல்லது டெலிவரி விவரங்களை டீலரிடம் உறுதி செய்வது பணத்தை மிச்சப்படுத்த உதவும்.