

இந்தியாவில் தொலைக்காட்சி (TV) பார்ப்பது என்பது பெண்களுக்கும் முதியவர்களுக்கும் மிக முக்கியமான ஒரு பொழுதுபோக்கு சாதனமாக பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் டிவி ஒரு சிறந்த துணையாகவும், தனிமையைப் போக்கும் ஒரு வழியாகவும் இருக்கிறது. இரவு நேரங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சீரியல்களோ அல்லது திரைப்படங்களோ பார்ப்பது ஒரு குடும்ப வழக்கமாகவே பல வீடுகளில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எவ்வித தொழில்நுட்ப அறிவும் இல்லாமல், ஒரு ரிமோட் பட்டனை அழுத்துவதன் மூலம் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை அவர்களால் பார்க்க முடிகிறது.
பொதுவாக கேபிள் டிவி, டிடிஎச் (DTH - Direct-To-Home) போன்ற சேவைகள் வழியாக லைவ் டிவி சேனல்களை பார்க்க வேண்டுமானால், டிஷ் (Dish), வயர் மற்றும் செட்-டாப் பாக்ஸ் (Wire and Set-Top Box) போன்ற பெரிய செட்டப்பே இருக்க வேண்டும். ஆனால், தற்போது செட்-டாப் பாக்ஸ், டிஷ் ஆண்டெனா (Dish Antenna) மற்றும் கேபிள் ஒயர்கள் ஏதுமின்றி டிவி சேனல்களை பார்க்கும் புது வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெறும் ரூ.199 முதல் ஸ்மார்ட் டிவி மட்டுமல்லாமல், ஸ்மார்ட்போன், டேப்லெட் டிவைஸ்களிலும் பார்த்து கொள்ளலாம்.
பாரம்பரிய டைரக்ட்-டு-ஹோம் (DTH) சேவையில் முன்னணியில் உள்ள டாடா பிளே நிறுவனம் (Tata Play) டிஷ் அல்லது செட்-டாப் பாக்ஸ் இல்லாமல், இணைய இணைப்பு மூலமாகவே 500-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களைப் (Live TV) பிராட்பேண்ட் இணையம் வழியாக நேரடியாக பார்க்கும் வகையில் புதிய 'டாடா பிளே ஸ்மார்ட்' (Tata Play Smart) செயலியை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்மார்ட் டிவிகள், மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்களில் தடையின்றிப் பயன்படுத்த கூடிய இந்த செயலிக்கு மாதாந்திர சந்தா கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இது சாட்டிலைட் வழி DTH சேவையிலிருந்து வெளியேறுவதற்கான முயற்சி அல்ல என்றும், இணையவழி டிவியும் டிடிஹெச்-சும் இணைந்தே வளர்ச்சி அடையும் என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவில் கட்டண டிடிஹெச் (Pay DTH) சந்தாதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வரும் சூழலில் இந்த அறிமுகம் நிகழ்ந்துள்ளது.
சமீபத்திய TRAI (இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அறிக்கையின்படி, இந்தியாவின் கட்டண டிடிஹெச் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜூன் 2025-ல் 5.61 கோடியாக இருந்தது, அதுவே ஜூன் 2026-ல் 4.86 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது, ஒரே ஆண்டில் சுமார் 75 லட்சம் (7.51 மில்லியன்) சந்தாதாரர்களை இத்துறை இழந்துள்ளது.
அதிவேக ஃபைபர் இன்டர்நெட் வசதி மற்றும் ஸ்மார்ட் டிவிகளின் வருகையால், மக்கள் தங்களுக்குப் பிடித்தமான உள்ளடக்கங்களை ஆன்-டிமாண்ட் முறையில் ஓடிடி தளங்களில் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
பட்ஜெட் வாடிக்கையாளர்கள் கட்டணம் இல்லாத பிரசார் பாரதியின் DD Free Dish சேவைக்கு மாறி வருகின்றனர். இன்டர்நெட் மூலம் நேரடியாக டிவி சேனல்களை வழங்கும் IPTV (உதாரணமாக ஏர்டெல் IPTV) வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது.
இந்த கடுமையான சரிவிலிருந்து தப்பிக்கவும், வாடிக்கையாளர்களைத் தக்கவைக்கவும் முன்னணி டிடிஹெச் நிறுவனங்கள் டிஷ் ஆண்டெனா மற்றும் செட்-டாப் பாக்ஸ் இல்லாத புதிய இணையம் சார்ந்த சேவைகளை அறிமுகம் செய்து வருகின்றன.
அந்த வகையில் தான் செட்-டாப் பாக்ஸ் எதுவும் இல்லாமல், ஸ்மார்ட் டிவி மற்றும் மொபைலில் நேரடியாக இன்டர்நெட் வழியாக லைவ் டிவி சேனல்களைப் பார்க்கும் டாடா பிளேயின் புதிய ஆப் வசதியை இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ நிறுவனமும் இதே போல ரூ.200 விலைக்கு லைவ் டிவி சேனல்களை கொடுக்கிறது என்றாலும், இது ஜியோ சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் டாடா பிளே ஸ்மார்ட் ஆப்புடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் கிடைக்கும் சலுகையாக ஜியோ நிறுவனம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ.200 விலை கொண்ட திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி, 1000+ லைவ் டிவி சேனல்கள் ஜியோ கஸ்டமர்கள் மட்டுமே பெற்று கொள்ள முடியும்.
டாடா பிளே ஸ்மார்ட் ஆப்பின் முக்கிய அம்சங்கள் :
* சாட்டிலைட் டிஷ், செட்-டாப் பாக்ஸ் அல்லது கூடுதல் கேபிள்கள் இல்லாமல் வெறும் வைஃபை/பிராட்பேண்ட் இணைப்பு இருந்தால் போதும்.
* 500-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன.
* இந்த ஆப்பை பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
* சேனல் எண்கள், புரோகிராம் வழிகாட்டி (Programme Guide) மற்றும் ரிமோட் கட்டுப்பாடுகள் போன்ற வழக்கமான டி.வி. பார்க்கும் அனுபவம் கிடைக்கும்.
* இந்த டாடா பிளே ஸ்மார்ட் ஆப்பை ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன், டேப்லெட் அல்லது லேப்டாப் போன்ற எந்த டிஸ்பிளே டிவைஸ்களிலும் ஸ்ட்ரீம் செய்து கொள்ள முடியும்.
* தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன. மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப சந்தாவை பெற்று கொள்ளலாம். மாத subscription கட்டணம் ரூ. 199-ல் தொடங்குகிறது.
* சாம்சங் டிவிகள் (Samsung), ஆண்ட்ராய்டு டிவி (Android TV), கூகுள் டிவி (Google TV), ஃபயர் டிவி (Amazon Fire TV) மற்றும் VIDAA போன்ற ஸ்மார்ட் டிவி தளங்களில் இது செயல்படுகிறது.
* அதுமட்டுமின்றி ஸ்மார்ட்போன்கள் (ஆண்ட்ராய்டு மற்றும் iOS), டேப்லெட்டுகள் மற்றும் லேப்டாப்களிலும் இதனைப் பயன்படுத்தி பார்க்கலாம்.