

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 25) தொழில் முதலீடு மற்றும் ஊக்குவிப்பு, இயற்கை வளங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட 3 துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பை வழங்கும் வகையில், டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. இதன்படி 2010 ஆகஸ்ட் 23-க்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. இதன் மூலம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள்.
தமிழக அரசின் டெட் தேர்வு விலக்கு தனித் தீர்மானத்தை திமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்றன. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
2009-க்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தமிழக ஆசிரியர்களைப் பாதுகாக்க அப்போதைய திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இருப்பினும் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவில் இருந்து மாறாததால் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 3 முறை டெட் தேர்வை நடத்த அரசு திட்டமிட்டது. இதன்படி ஆண்டுக்கு 1 முறை ரெகுலர் டெட் தேர்வும், 2 முறை சிறப்பு டெட் தேர்வும் நடக்கும் என அறிவிப்பு வெளியானது. அதோடு ஆசிரியர்களுக்கு துணையாக தமிழக அரசு நிற்கும் என்ற நம்பிக்கையையும் அளித்தது.
இந்நிலையில் இன்று ஆசிரியர்களுக்கு நற்செய்தியை அளிக்கும் விதமாக டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "15 முதல் 20 ஆண்டுகள் வரை மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு ஓயாது உழைத்த ஆசிரியர்களின் பணி மகத்தானது. மத்திய அரசு கொண்டு வந்த டெட் தேர்வு தேர்ச்சி என்ற கட்டாய நடைமுறைப்படி தமிழ்நாட்டில் 3,28,701 ஆசிரியர்கள் பாதிப்படைவார்கள். இருப்பினும் ஆசிரியர்களுக்கு துணையாக தமிழக அரசு இருக்கும் என்பதை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன். இதன்படி 2010 ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு முன்னதாக பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தனித் தீர்மானத்தை சட்டசபையில் அரசு கொண்டு வருகிறது. இந்தத் தீர்மானத்தின் படி ஓய்வு பெறும் நிலையில் உள்ள தமிழக ஆசிரியர்களின் பணிப் பாதுகாக்கப்படும். இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி நல்ல முடிவைக் கொண்டு வருவோம்" என அமைச்சர் கூறினார்.
டெட் தேர்வில் இருந்து தமிழக ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் ஏற்கனவே கூறி வந்த நிலையில், தமிழக அரசின் தீர்மானத்திற்கு வரவேற்பு அளித்துள்ளன. எவ்வித எதிர்ப்பும் இன்றி தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், இதுகுறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
15 முதல் 20 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற மற்றும் ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களுக்கு தமிழக அரசு கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும் இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.