தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் இன்று தொடக்கம்: யாருக்கெல்லாம் 1 கிராம் தங்க மோதிரம் கிடைக்கும்?

இந்தத் திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்AI image
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

‘தாய்​மாமன் தங்க மோதிரம்’ வழங்​கும் திட்​டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்​கிறார்.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், ‘தாய்மாமன் சீர்’ மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ (Thaaimaman Thanga Mothiram) என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை ஜூன் 23-ம் தேதி வெளியிடப்பட்டது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக முதல் தவணையாக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்துள்ள மற்றும் இனி பிறக்கப்போகும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இந்த மோதிரம் வழங்கப்படும். ஜூன் 22 முதல் இன்று (திட்டம் தொடங்கும் நாள் -செப்டம்பர் 28) வரை இடைப்பட்ட காலத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரங்களை வழங்க மாநிலம் முழுவதும் 107 விநியோக மையங்கள் (Hubs) அமைக்கப்பட்டுள்ளன. மையம் ஒன்றிற்கு நாளொன்றுக்கு 100 குழந்தைகள் வீதம் தலா 1 கிராம் தங்க மோதிரங்கள் செப்டம்பர் 28 முதல் வழங்க உரிய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திட்டம் இன்று தொடங்கிய பிறகு (செப்டம்பர் 28 முதல்) அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் போதே (Discharge) இந்த மோதிரம் நேரடியாக வழங்கப்பட்டுவிடும்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

யாருக்கெல்லாம் 1 கிராம் தங்க மோதிரம் கிடைக்கும்?

* குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

* கர்ப்பிணிகளிடம் ஆதார், ஸ்மார்ட் கார்டு, பிக்மி எண், தாயின் வங்கி கணக்கு விவரம் பெறப்படுகிறது.

* தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கு மட்டுமே இந்த 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

* தனியார் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

* பாலின வேறுபாடு இன்றி ஆண் மற்றும் பெண் குழந்தைகள் அனைவருக்கும் இந்த 22 காரேட் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: 1 பைசாவிற்கு தங்கமா? வைரலாகும் வதந்தி...உண்மை நிலை என்ன?
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

* அரசு மருத்துவமனைகளில் தாய்சேய் நலக் கண்காணிப்பின் கீழ் பதிவு செய்து, முதல் மற்றும் இரண்டாவது பிரசவத்தில் பிறக்கும் (2 குழந்தைகளுக்கு) குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் தங்க மோதிரம் வழங்கப்படும்.

* கர்ப்பிணிப் பெண்கள் கருவுற்றது முதல் கிராம/நகர்ப்புற சுகாதாரச் செவிலியரிடம் பதிவு செய்து 12 இலக்க 'பிக்மி' (PICME - Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) பதிவு எண்ணை பெற்றிருக்க வேண்டும். PICME (கர்ப்பம் மற்றும் குழந்தை நலப் பதிவு) முறையில் பதிவு செய்து RCH (Reproductive and Child Health) அடையாள எண் பெற்றிருக்க வேண்டும். இதுவே இந்தத் திட்டத்தின் பலனைப் பெற முதன்மையான ஆவணமாகும்.

* குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் ஆதார் அட்டை நகல்கள், குடும்ப அட்டை (Ration Card) அல்லது வசிப்பிடத்திற்கான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதன் மூலம் பயனாளிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தானா என்பது உறுதி செய்யப்படும்.

* இந்தத் திட்டத்தின் பலனைப் பெற, அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததற்கான மருத்துவமனை டிஸ்சார்ஜ் சுருக்கம் (Discharge Summary) மற்றும் அரசுத் தரப்பில் வழங்கப்படும் பிறப்புச் சான்று சீட்டு போன்ற முக்கிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஷாக்.! இந்த 2 மாவட்ட மக்களுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் கிடைக்காது..! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.!
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

* தாய்மார்களின் ஊட்டச்சத்து நிதி உதவிக்கு இணைக்கப்பட்டுள்ள தாய்-சேய் நலப் பாதுகாப்பு அட்டை (RCH ID Card) மற்றும் தாயின் நேரடி வங்கிக் கணக்கு புத்தக நகல் (Bank Passbook) ஆகியவை சரிபார்ப்பு பணிகளுக்காகத் தேவைப்படும்.

logo
Kalki Online
kalkionline.com