

அழகிய கோயில்கள், மிதக்கும் சந்தைகள், நீண்ட கடற்கரைகள் ஆகியவற்றுக்காக சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக அறியப்படும் தாய்லாந்து, தற்போது கனமழை மற்றும் வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் பாங்காக்கில் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியதால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 16 முதல் பெய்து வரும் கனமழையால் தாய்லாந்தின் 42 மாகாணங்களும் தலைநகர் பாங்காக்கும் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 29 நிலவரப்படி 9.4 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளைச் சேர்ந்த சுமார் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் வெள்ளநீர் இன்னும் வடியாமல் இருப்பதுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
பாங்காக்கை மூழ்கடித்த மழை :
தாய்லாந்தின் தலைநகரான பாங்காக், கடல் மட்டத்துக்கு மிக அருகில் அமைந்துள்ள நகரம். மென்மையான டெல்டா மண் மீது அமைந்துள்ளதால், நகரம் ஆண்டுதோறும் சில மில்லிமீட்டர்கள் அளவுக்கு கீழிறங்கி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கனமழை பெய்யும்போது வெள்ளநீர் விரைவாக வெளியேறுவது கடினமாகிறது.
செப்டம்பர் 24 முதல் 27 வரை பெய்த கனமழை பாங்காக்கின் பல பகுதிகளைத் தண்ணீரில் மூழ்கடித்தது. சில பகுதிகளில் இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 300 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவானது. சாலைகளில் கார்கள் பாதியளவுக்கு நீரில் மூழ்கின. வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் தங்கள் உடைமைகளை மேல்தளங்களுக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏறத்தாழ நாடு முழுவதையும் பேரிடர் பகுதியாக அறிவித்து அதிகாரிகள் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சில இடங்களில் மக்கள் இடுப்பளவு தண்ணீரில் நடந்து உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைத் தேடிச் சென்றனர்.
போக்குவரத்தும் பாதிப்பு :
வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கடைகள், அலுவலகங்கள், சிறு வணிக நிறுவனங்கள் பல மூடப்பட்டன. விநியோகப் பணியாளர்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட தினசரி வருமானத்தை நம்பியிருப்பவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. பாங்காக்கின் முக்கிய விமான நிலையமான சுவர்ணபூமி விமான நிலையத்திலும் வெள்ளத்தால் விமான சேவைகளில் குழப்பம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான பயணிகளின் உடைமைகள் தேங்கியதால், அவற்றை மீண்டும் உரிய பயணிகளிடம் சேர்ப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பொருளாதாரத்துக்கும் அடி :
வெள்ளத்தின் தாக்கம் வீடுகள் மற்றும் சாலைகளுடன் முடிந்துவிடவில்லை. வணிகம், போக்குவரத்து, சுற்றுலா, விநியோகச் சங்கிலி என பல துறைகளிலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ராங்சிட் பல்கலைக்கழகத்தின் மதிப்பீட்டின்படி, செப்டம்பர் 24 முதல் 27 வரையிலான வெள்ளத்தால் நாடு முழுவதும் ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பு சுமார் 25.3 பில்லியன் தாய் பாட் என கணிக்கப்பட்டுள்ளது.
அரசின் மீட்புப் பணிகள் :
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்க மொபைல் சமையலறைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 4.1 பில்லியன் தாய் பாட் அவசர நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.
மழை குறைந்ததால் பாங்காக்கின் சில பகுதிகளில் வெள்ளநீர் வடியத் தொடங்கியுள்ள போதிலும், தாழ்வான பகுதிகளில் இன்னும் நீர் தேங்கியுள்ளது. தாய்லாந்தின் இந்த சமீபத்திய வெள்ளம், இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் வேகமான மீட்பு நடவடிக்கைகளுடன், நகரத் திட்டமிடல், நீர்வழிப் பராமரிப்பு மற்றும் எதிர்கால காலநிலை மாற்றத்துக்கேற்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் அவசியத்தையும் மீண்டும் நினைவூட்டியுள்ளது.