

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் நிபந்தனைகளை தளர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளின் தாய், தமிழ்நாட்டில் பிறந்து வெளிமாநிலத்தில் வசித்தாலும் 'தாய்மாமன் தங்கமோதிரம்' திட்டத்தில் பலன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் 28-ம்தேதி முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு அவர் மோதிரத்தை அணிவித்தார்.
இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. முதற்கட்டமாக, 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு ஜூன் 22-ம்தேதி முதல், அரசு மருத்துவமனைகளில் பிறந்த, பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், 1 கிராம் எடையில், 'ஹால்மார்க்' முத்திரை பதித்த, 22 காரட் தங்க மோதிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகள்படி, பிரசவித்த தாயார் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.
மோதிரம் பெறுவதற்காக தனியாக விண்ணப்பிக்க தேவையில்லை. மருத்துவமனை மற்றும் பிறப்பு பதிவுகளின் அடிப்படையில், தகுதி சரிபார்க்கப்பட்டு நேரடியாக வழங்கப்படும். தாய்மார்கள் PICME முறையில் பதிவு செய்திருத்தல் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது மோதிரம் வழங்கப்படுகிறது.
அத்துடன், பிரசவத்தில் ஒரு பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தால், அந்த இரண்டு குழந்தைகளுக்கும் தனித்தனியாக தங்க மோதிரம் வழங்கப்படும் என்பதும் கூடுதல் சிறப்பு.
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு, பச்சிளங்குழந்தையின் பெயரில் 1 கிராம் தங்கம் வழங்கப்படுவது பெரிய நிதியுதவியாகவே கருதப்படுகிறது. அதனால், பொதுமக்களிடையே இத்திட்டமானது, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்வு தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின்கீழ் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, தமிழ்நாட்டுப் பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் வேறு மாநிலத்தில் வசித்து வந்தாலும், அவரது பெற்றோர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசித்து வரும் நிலையில், பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்ளும் சில நிகழ்வுகள் அரசின் கவனத்திற்கு வந்தன.
அதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் பிறந்து, திருமணமாகி வெளிமாநிலத்திற்கு சென்றிருந்தாலும், அத்தாயின் தாய் தந்தையர் இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்து, அதற்கான உரிய ஆவண ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அந்த குழந்தைக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் உடனடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவத்தை ஊக்குவிக்கவும், தாய் மற்றும் சேய் நலனைப் பாதுகாக்கவும் இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.