

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவ்வகையில் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 173வது திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது.
இப்படத்தை இயக்கும் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ரஜினிக்காக சுமார் 83 தோற்றங்களை வடிவமைத்துள்ளார். இந்த தோற்றங்கள் அனைத்தும், ரஜினிக்காகவே மாஸாக உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினியின் 173-வது படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படத்தின் இயக்குநர் தேர்வு மட்டுமே சில மாதங்களாக நடந்த நிலையில், முதலில் சுந்தர்.சி தான் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு படத்தின் கதையில் ரஜினிக்கு விருப்பமில்லாத காரணத்தால் இயக்குநரை மாற்றி விட்டார் கமல்.
அதன்பிறகு தேர்வானவர் தான் சிபி சக்கரவர்த்தி. தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ஆளுமையாக இருக்கும் ரஜினி மற்றும் கமல் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சூழலில், ரஜினிக்காக 83 புதிய தோற்றங்களை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.
இந்தத் தோற்றங்களில் 3 தோற்றங்கள் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளன. இறுதிப் பட்டியலில் இருந்து ஒரு தோற்றத்தை மட்டும் நடிகர் ரஜினியே தேர்ந்தெடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அந்த ஒரு தோற்றம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் ரஜினியை தமிழ் சினிமா பல்வேறு தோற்றங்களில் கண்டுள்ளது. இந்நிலையில் அவருடைய அடுத்தப் படத்தில் ஒரு வித்தியாசமான புதிய தோற்றத்தில் ரஜினியை காணவிருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை
சிவகார்த்திகேயனை வைத்து டான் என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்த சிபி சக்கரவர்த்தி, ரஜினிகாந்தை வைத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சூழலில் அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படம் தவிர இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினியும், கமலும் இணைந்து நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிபி சக்கரவர்த்தி இயக்கம் படத்தில் தயாரிப்பாளரும் நடிகருமாக ஜோடி சேர்ந்துள்ள கமல் மற்றும் ரஜினி, அடுத்த படத்தில் நடிகர்களாகவே இணைந்து நடிக்கவுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிப்பதால், தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போதே எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.