

தெருவோர வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் அல்லது சிறு கடைக்காரர்கள் போன்ற பலர் நிரந்தர வேலை இல்லாமல் சிரமப்படுகின்றவர்களுக்கு ஒரு நிலையான ஓய்வூதியத் திட்டமும் எதுவும் இல்லை. இவ்வாறு கஷ்டப்படுபவர்களின் பிரச்சினைனையை நிவர்த்தி செய்ய, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது தான் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன் யோஜனா என்ற திட்டம். 'பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்' (PM-SYM) என்பது அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 60 வயதிற்குப் பிறகு மாதம் ரூ.3,000 உத்தரவாத ஓய்வூதியம் வழங்கும் மத்திய அரசுத் திட்டமாகும்.
இதில் உங்கள் முதுமைக் காலத்தில் ஒரு சீரான வருமானத்தை உறுதி செய்வதற்காக உங்கள் சார்பாகவும், அரசு சார்பாகவும் ஒரு சிறிய தொகை பங்களிப்பு செய்யப்படும்.
இந்தியக் குடிமகனாக இருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர முடியும்.
18 முதல் 40 வயதுக்குட்பட்ட மற்றும் மாதம் 15,000 ரூபாய் வரை சம்பாதிக்கும் நபர்கள் மட்டுமே இதில் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.
இவர்கள் மாதந்தோறும் ரூ.55 முதல் ரூ.200 வரை முதலீடு செய்வதன் மூலம், myScheme மற்றும் e-Shram மூலம் பயன்பெறலாம்.
18 வயதில் இணைபவர்கள் மாதம் 60 ரூபாயும், 40 வயதில் இணைபவர்கள் 200 ரூபாயும் என 60 வயது வரை செலுத்த வேண்டும்.
60 வயதை அடைந்த பிறகு, பயனாளிகள் மாதந்தோறும் ரூ.3000/- உறுதியான ஓய்வூதியம் கிடைக்கும்.
கணவன் மற்றும் மனைவி இருவரும் இத்திட்டத்தில் இணைந்தால், அவர்களுக்கு கூட்டாக மாதம் ரூ. 6000/- ஓய்வூதியம் கிடைக்கும்.
திட்டத்தின் பயனாளி திடீரென்று இறந்தால், அவரது வாழ்க்கைத் துணைவர் அந்தத் திட்டத்தைத் தொடரலாம் அல்லது அவரது துணைவருக்கு 50% (ரூ.1,500) குடும்ப ஓய்வூதியம் பெறலாம்.
தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை,
வங்கி கணக்கு புத்தகம்,
மொபைல் எண்.
விண்ணப்பிக்கும் முறை:
உங்களுக்கு அருகிலுள்ள பொதுச் சேவை மையத்தில் (CSC) அல்லது myScheme இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பொதுச் சேவை மையத்தில் சென்று பதிவு செய்தவுடன் ஒவ்வொரு மாதமும் உங்களது வங்கிக்கணக்கில் இருந்து தானாகவே பணம் கழிக்கப்படும் வகையில் தானியங்கிப் பற்று (auto debit) அமைக்கப்படும். அதன் பிறகு உங்களுக்கு ஒரு ஓய்வூதிய அட்டை கொடுக்கப்படும்.
மேலும் இந்த திட்டம் குறித்து அறிந்து கொள்ள 1800 267 6888 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம்.
இந்த திட்டம் குறைந்த வருமானம் பெறும் பல தொழிலாளர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு இது ஒரு முக்கியமான நிதிப் பாதுகாப்பாக அமையக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் தவறாமல் பணம் செலுத்தினால் மட்டுமே இந்தத் திட்டத்தின் முழுபயனையும் நீங்கள் அடைய முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கடந்த மார்ச் மாத (2026) நிலவரப்படி, PM-SYM திட்டத்தின் கீழ் 52.5 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் பதிவு செய்துள்ளதாக அரசாங்க தரவுகள் குறிப்பிடுகின்றன.