

தேனி மாவட்டத்தில் விவசாயிகள் 1 ஏக்கருக்கு ரூ.38,828 வரை இழப்பீடு பெற, 1.5% கட்டணமான அதாவது ரூ.589.50 மட்டும் பிரீமியமாகச் செலுத்தி வருகிற நவம்பர் 16-ஆம் தேதிக்குள் தங்கள் நெற்பயிர்களைக் காப்பீடு (Crop Insurance Scheme) செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
விவசாயிகள் தாங்கள் படும் கஷ்டத்திற்கு தகுந்த பலன் கிடைக்க வேண்டும் என்றால், பயிர் காப்பீடு செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். காப்பீடு செய்யாமல் போனால், வறட்சி, பேரிடர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் நிவாரணம் பெற முடியாது. விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு சில நூறு ரூபாய்கள் மட்டுமே பிரீமியமாகச் செலுத்தினால் போதும்.
பாதிப்பு ஏற்படும் போது பல ஆயிரம் ரூபாய் நஷ்டஈடாகக் கிடைக்கும். எதிர்பாராமல் வரும் வறட்சி, வெள்ளம், புயல், வராமல் போகும் பருவமழை மற்றும் பூச்சித் தாக்குதல் போன்ற அனைத்துப் பாதிப்புகளுக்கும் இதில் இழப்பீடு பெற முடியும்.
விவசாயிகளுக்கு இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர்ப் பெரும் நஷ்டத்தைத் தடுத்து, அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பையும் மன அமைதியையும் தருவதில் பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் (Crop Insurance) மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் குறிப்பாக பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) போன்ற திட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்களின் பயிர்களுக்குக் காப்பீடு செய்து கொள்ள முடியும்.
கூட்டுறவு வங்கிகள் அல்லது வணிக வங்கிகளில் பயிர்க்கடன் (KCC) வாங்கும் விவசாயிகளுக்கு, முன்னதாக இது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தற்போது இது விருப்பத்தின் பேரில் மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், கடன் வாங்கும் போதே வங்கியில் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையைச் செலுத்த விண்ணப்பிக்கலாம்.
சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கோ விவசாயம் செய்யும் பிற விவசாயிகளும் பொது சேவை மையங்கள் (CSC) மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ காப்பீடு செய்யலாம்.
வறட்சி, வெள்ளம், புயல், பூச்சிகளின் தாக்குதல் போன்ற காரணங்களால் பயிர் சேதமடைந்தால், பயிர் சேதமடைந்த 72 மணி நேரத்திற்குள் அது குறித்த தகவலைக் காப்பீட்டு நிறுவனத்திற்கோ, சம்பந்தப்பட்ட வங்கிக்கோ அல்லது வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கோ தெரியப்படுத்த வேண்டும்.
இதன் மூலம் கடன் வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் நஷ்ட பயத்தைப் போக்கி மன அமைதியைத் தருகிறது. எனவே விவசாயிகள் சரியான முறையில் அதிகாரிகளை அணுகி காப்பீடு பெறுவதற்கு இன்று ஏராளமான வழிகள் உள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வைத்தியநாதன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘தேனி மாவட்டத்தில் 2026-27-ம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) சம்பா சிறப்பு பருவம் நெல் பயிருக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது மாவட்டத்தில் நெல் சம்பா சிறப்பு பருவ பயிருக்கு ஆண்டிப்பட்டி, கண்டமனூர், இராஜதானி, தேவாரம்சம்பட்டி, தென்கரை, தேனி, கொடுவிலார்பட்டி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, போடி, கோடாங்கிப்பட்டி, ராசிங்காபுரம் ஆகிய 14 குறு வட்டங்கள் (பிர்க்காக்கள்) அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன.
சம்பா சிறப்பு பருவத்தில் காப்பீடு செய்யப்படும் நெற்பயிர்களை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதிக்குள் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்ய வேண்டும். விவசாயிகள் 1 ஏக்கருக்கு ரூ.38,828 வரை இழப்பீடு பெற, 1.5% கட்டணமான, அதாவது ரூ.589.50 மட்டும் காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. இந்த 14 குறு வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்புகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.
எனவே சம்பா நெல் சிறப்பு பருவம் சாகுபடி கொண்டுள்ள விவசாயிகள் கூட்டுறவு சங்கத்திலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ கடன்பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ, http://www.pmfby.gov.in என்ற தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில் நேரடியாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விருப்பத்தின்பேரில் காப்பீடு செய்யலாம்.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு சாகுபடிக்கான அடங்கல், இ-அடங்கல் சான்றிதழ், வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பிறகு அதற்கான முறையான ரசீதை (Acknowledgement Receipt) மறக்காமல் பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பிற்காலத்தில் பயிர்ச் சேதத்திற்கான இழப்பீடு கோர முக்கிய ஆதாரமாக விளங்கும்.
மேலும், பணம் செலுத்தி ரசீது வாங்குவதற்கு முன், கணினியில் அனைத்து விவரங்களும் சரியாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை விவசாயிகள் கட்டாயம் சரிபார்க்க வேண்டும்.
குறிப்பாக பணம் செலுத்தும் போது தாங்கள் சாகுபடி செய்துள்ள வருவாய் கிராமத்தின் பெயர்(Revenue Village), புல எண் (Survey Number) அதாவது, நிலத்தின் சரியான சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண், காப்பீட்டுத் தொகை வந்து சேர வேண்டிய சரியான வங்கி கணக்கு எண் போன்ற விவரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பதையும் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.