

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) சார்பில் மிக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு தீப தரிசனத்திற்கான கட்டண தரிசன முறை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு, இணையதளம் வழியாக முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு இலவச அனுமதி பாஸ் வழங்கப்பட உள்ளது.
தமிழ் மாதங்களில் பக்தி நிறைந்த மாதங்களில் மிக முக்கியமான மாதமாக கருதப்படுவது கார்த்திகை மாதம். கார்த்திகை மாதம், இறைவனை ஜோதி வடிவமாக வழிபட வேண்டிய மாதமாகும்.
வரும் நவம்பர் 24-ம்தேதி செவ்வாய்க்கிழமை அன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்று அதிகாலை 4:00 மணிக்கு கோவிலுக்குள் பரணி தீபமும், மாலை 6:00 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பின்னர் வீடுகளிலும் மாலையில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம்.
இதற்கிடையே திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவிலில் இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை கோவிலுக்குள் இருந்து தரிசிப்பதற்கான கட்டண தரிசன டிக்கெட் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண பக்தர்களும் எவ்விதக் கட்டணமுமின்றி தீப தரிசனம் காண வழிவகை செய்கிறது.
அதன்படி, 3,000 பக்தர்களுக்கு ஆன்லைனில் இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட உள்ளன. திருவண்ணாமலையைச் சேர்ந்த 1,500 பேருக்கும், வெளியூர் பக்தர்கள் 1,500 பேருக்கும் பாஸ் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களில் இருந்து மொத்தம் 3,000 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரணி தீபம் மற்றும் மகா தீபத்தைக் கண்டு களிப்பதற்கான அனுமதி பாஸ் வழங்கப்படும்.
இலவச அனுமதி பாஸ் பெற விரும்பும் பக்தர்கள், இந்து சமய அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகத் தங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.
இலவச பாஸ் - முக்கிய விவரங்கள்:
மொத்த அனுமதிச் சீட்டுகள்: 3,000 பக்தர்கள் (திருவண்ணாமலையைச் சேர்ந்த 1,500 பேர் மற்றும் வெளியூர் பக்தர்கள் 1,500 பேர்).
முன்பதிவு காலம்: நவம்பர் 18 காலை 11:00 மணி முதல் நவம்பர் 20 மாலை 3:00 மணி வரை.
பதிவு முறை: ஆதார் எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் வழியாக இலவசமாக முன்பதிவு செய்யலாம்.
தேர்வு மற்றும் அறிவிப்பு: நவம்பர் 20 மாலை 4:00 மணிக்கு வெளிப்படையான முறையில் கணினி குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, SMS மற்றும் இணையதளம் வழியாக அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மகா தீபம் ஏற்றப்படும் நவம்பர் 24-ம் தேதியன்று பக்தர்கள் அண்ணாமலை உச்சிக்கு ஏற மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஆண்டுதோறும் 2,500 பக்தர்களுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் மலை ஏற அனுமதி வழங்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், கனமழை மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த ஆண்டு அந்த அனுமதி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.