

திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட பெருந்துறை மற்றும் பவானி தொகுதிகள் முறையே ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் கீழ் நிர்வகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பெருந்துறை தொகுதியிலிருந்து சட்டசபை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அமைச்சராக தோப்பு வெங்கடாசலம் பணியாற்றினார். கொங்கு மண்டலத்தில் அதிமுகவில் கொடி கட்டி பறந்தவர் தோப்பு வெங்காடலம். 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இவருக்கு எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்கவில்லை. தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் அவர் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
அதிமுகவில் இருந்து விலகி 2021ல் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னர் அவர் கடந்த சில நாட்களால் திமுகவின் எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அவருடைய மாவட்ட பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் அவர்களை, அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, ஈரோடு மத்திய மாவட்டத்திற்குரிய சட்டமன்ற தொகுதிகளான பெருந்துறை தொகுதி ஈரோடு தெற்கு மாவட்டத்திலும், பவானி தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு அந்தந்த மாவட்ட கழகச் செயலாளர்கள் நிர்வகிப்பார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே பெருந்துறை சட்டமன்ற தொகுதி காலியாக உள்ள நிலையில், தோப்பு வெங்கடாசலத்தின் கட்சி பதவி பறிக்கப்பட்டிருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.
மேலும் தோப்பு வெங்கடாசலத்திற்கும் முன்னாள் அமைச்சர் முத்துசாமிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த தோப்பு வெங்கடாசலம், ‘எனக்கு தலைமை உரிய மரியாதை கொடுத்தார்கள்.
உட்கட்சிப் பிரச்சனையால் திமுக ஆட்சி இழந்து இருக்கிறது. என்னை பொறுப்பிலிருந்து நீக்கியதை எனக்கு நல்லதா அல்லது கட்சிக்கு நல்லதா என காலம் முடிவு செய்யும்.
திமுக அமைச்சர் முத்துசாமி மனதார நினைத்திருந்தால் ஈரோடு மாவட்டத்தில் உட்கட்சிப் பிரச்சனையை தீர்த்து இருக்கலாம். எனது தோல்விக்கு முத்துசாமி தான் காரணம் என சொல்லவில்லை. அவர் மனசாட்சிக்கு தெரியும். நிர்வாகிகளிடம் தலைமை கருத்து கேட்பதை விட தொண்டர்களிடம் கருத்து கேட்க வேண்டும். கட்சியை விட்டு நீக்குவது ஒரு பெரிய விஷயமில்லை. என்னிடத்தில் விளக்கம் கேட்கவில்லை.
பணமோ வேறு எதையும் எதிர்பார்த்து இந்த கட்சியில் சேரவில்லை. நல்ல மனிதர் ஸ்டாலினுக்காக சேர்ந்தேன். என்னுடைய நியாயமான கோரிக்கை கூட திமுக ஆட்சியில் ஏற்கப்படவில்லை. எம்பி தேர்தலில் சுப்புராயனுக்கு பெருந்துறை தொகுதியில் 13 ஆயிரம் வாக்குகள் அதிகம் வாங்கி கொடுத்தேன். ஆனால், எனது வெற்றிக்கு முக்கிய நிர்வாகிகள் உழைத்தார்களா என தெரியவில்லை. எந்த இயக்கத்தில் இருந்தாலும் நன்றி கடனோடு விருப்பு வெறுப்பின்றி பணியாற்றினேன்’ என்று பேசினார்.
உட்கட்சி பூசல் காரணமாக கட்சி பணியில் ஈடுபடாமல் தோப்பு வெங்கடாச்சலம் ஒதுங்கி இருந்தது தான் பதவி பறிப்புக்கு காரணமாக என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.