

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக தவெக அரசு நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக பெண்களை கவரும் வகையில் வெளியிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு கவனம் செலுத்தி வருகிறது.
அதாவது, தவெக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாதம் தோறும் மகளிரூக்கு 2,500 ரூபாய் நிதியுதவி ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், தாய்மாமன் சீர் திட்டம், அண்ணண் சீர் திட்டம், அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் போன்றவை தேர்தலில் போது தவெக வெளியிட்ட முக்கிய வாக்குறுதிகளாகும்.
இதில் தாய்மாமன் சீர் திட்டம், அண்ணண் சீர் திட்டம் ஆகியவை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அறிவிப்புகள் எப்போது வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முதலமைச்சர் விஜய் பெண்களுக்கு குட் நியூஸாக இன்று இரண்டு முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
தமிழக சட்டசபை 2 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. தொடர்ந்து 110 விதியின்கீழ் முதலமைச்சர் விஜய் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அந்த வகையில், வரும் பொங்கல் முதல் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டணமில்லா எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
அந்த சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் எரிவாயு பதிவு செய்து சிலிண்டர் பெறப்பட்டதும் எண்ணெய் நிறுவனங்களிடம் பயனாளிகளின் பட்டியல் பெறப்பட்டு வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என அறிவித்தார்.
யார் தகுதியானவர்கள்?
ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள 1,30,16,104 குடும்பங்கள்பயனடையும் என அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டம் வருகிற ஜனவரி மாதம் தை பொங்கல் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் இந்த திட்டத்திற்காக ஆண்டிற்கு ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
ஆண்டுக்கு 2.50 லட்சம் வரை வருமானம் பெறும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினருக்கு 3 சிலிண்டருக்கான விலை அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்தார். மேலும் சிறு குறு விவசாய குடும்பத்தினர், மாற்றுத்திறனாளி குடும்பத்தினர் பயன்பெறுவார்கள்.
பெண்கள் எந்தெந்த பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்?
விதி எண் 1100-ன் கீழ் மற்றொரு அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தில் (இலவச பயணம்) தற்போது மாநகர நகர்புற சாதாரண பேருந்துகளில் (white board) மட்டுமே பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர்.
தற்போது சாதாரண white board பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர்.
அதே போல ஊரக பகுதிகளில் டவுன் பஸ்கள் மற்றும் மலைப்பகுதிகளில் 40 கிலோ மீட்டர் வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.
பெருமளவில் பெண்களுக்கு பயனளிக்கும் வகையில், தற்போது இந்த வெற்றி பயணம் திட்டம் (Vetri Payanam) மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம்தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்தார்.
முதல் கட்டமாக மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் மாநகரம், நகரங்களில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி மாநகர, நகர பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ் (விரைவு) (Express), எல்எஸ்எஸ் ((Limited Stop Service-LSS), டீலக்ஸ் (Deluxe) மற்றும் ஏசி அல்லாத (Non-AC) அனைத்து அரசு பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம் என அவர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம் இனிமேல் இலவச பயணம் மேற்கொள்ள பெண்கள் வெள்ளை போர்டு பேருந்து வர வேண்டும் என காத்திருக்க வேண்டாம். ஏசி அல்லாத அனைத்து மாநகர பேருந்துகளிலும் பெண்கள் டிக்கெட் எடுக்காமல் பயணிக்க முடியும்.
மேலும் மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் (mofussil பேருந்துகள்) மற்றும் மலைப்பகுதி சாதாரண கட்டணப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் எனவும் அவர் அறிவித்தார்.
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தில், வருமான உச்ச வரம்பு அல்லது மேற்கொள்ளும் பயண எண்ணிக்கையிலோ எந்த கட்டுப்பாடுகளும் நிர்ணயிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக ஒருநாள் அல்லது ஒரு மாதத்திற்கு இத்தனை முறை தான் பயணிக்க வேண்டும் என்ற எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.
இத்திட்டத்தின் கீழ் திருநங்கைகளும் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பின் மூலம், பெண்கள் தொலைதூர கல்வி நிலையங்கள் செல்ல, பணியாற்ற, மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்ல கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க முடியும்.
வெற்றிப்பயணத் திட்டம் படிப்படியாக இதர சேவைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் தோராயமாக 6000 கோடி ரூபாய் கூடுதலாக செலவினம் ஏற்படும் என முதலமைச்சர் விஜய் கூறினார்.
முதலமைச்சர் விஜய் பெண்களின் நலனுக்காக அறிவித்துள்ள 'வெற்றிப் பயணம்' பேருந்து கட்டணமில்லா விரிவாக்கத் திட்டம் மற்றும் ஆண்டுக்கு 3 விலையில்லா எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம் ஆகியவை பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுள்ளன.