முதலமைச்சர் விஜய் இன்று திருச்சி பயணம்: 5000 பேருக்கு மட்டுமே அனுமதி..!!

CM VIjay
CM VIjayimage credit-newindianexpress.com
Updated on

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. 59 ஆண்டுகால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து விஜய் சாதனை படைத்தார். இந்த தேர்தலில் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றார்.

ஒருவர் ஒரு தொகுதியின் எம்எல்ஏவாக மட்டுமே இருக்க முடியும் என்பதால் விஜய் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பெரம்பூர் தொகுதியை வைத்துக்கொண்டார்.

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ ஆகிவிட்டதால் திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக முதலில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூற முதலமைச்சர் விஜய் இன்று திருச்சி செல்கிறார்.

இந்நிலையில், அமைச்சர் என்.ஆனந்த் முக்கிய அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் விஜய் இன்று மாலை சுமார் 4 மணியளவில் சென்னையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தடைய உள்ளார்.

இதையும் படியுங்கள்:
நாளை மறுநாள் திருச்சி செல்கிறார் முதலமைச்சர் விஜய்..!
CM VIjay

நடந்து முடிந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருச்சி விமான நிலையத்திலிருந்து திருச்சி-சென்னை நெடுஞ்சாலை வழியாக, T.V.S. டோல்கேட் மற்றும் பால்பண்ணை பகுதிகள் கடந்து, புனித ஜோசப் கல்லூரி மைதானம் வரை அவர் திறந்த வாகனத்தில் பயணித்தபடி பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

அதனை தொடர்ந்து திருச்சி புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களுக்கு நன்றி கூறுகிறார். கல்லூரி மைதானத்தில், சுமார் 5,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் ஒரு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வேறு யாருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான QR குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை.

எனவே இவர்கள் யாரும் கண்டிப்பாக வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் தங்களது வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு நிறுத்த வேண்டும்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனுமதிச் சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கண்டிப்பாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் அவர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டுகளித்து முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே முதலமைச்சர் விஜய் வரும் போது அவரது வாகனத்தை பொதுமக்களும், தொண்டர்களும் பின்தொடரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறைத் தலைவர் திரு. T.S. அன்பு தலைமையில், 2,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் வருகைக்காகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இக்காவல்துறைப் படையில், நான்கு துணை ஆய்வாளர்-ஜெனரல்கள் (DIG), 12 காவல் கண்காணிப்பாளர்கள் (SP), 40 துணை காவல் கண்காணிப்பாளர்கள் (DSP) மற்றும் 50 ஆய்வாளர்கள் ஆகியோர் அடங்குவர்.

இதையும் படியுங்கள்:
விஜய் சாருக்கு வாழ்த்துகள்! திரைத்துறையிலிருந்து வந்த முதல் வாழ்த்து..!
CM VIjay

திருச்சி கிழக்கை தொடர்ந்து விரைவில் சென்னை பெரம்பூர் தொகுதி மக்களையும் முதலமைச்சர் விஜய் சந்தித்து நன்றி கூற இருக்கிறார். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com