

கந்த சஷ்டி பெருவிழா இன்று (நவம்பர் 10) தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான முருகர் கோயில்களில் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அடுத்த 6 நாட்களுக்கு முருகர் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், தமிழக அரசு பாதுகாப்பு நடடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, இன்று (நவம்பர் 10) முதல் நவம்பர் 15-ம் தேதி வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 100 ரூபாய் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி விரைவாக சுவாமி தரிசனம் செய்ய முக்கிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 100 ரூபாய் விரைவு தரிசனக் கட்டண முறை நவம்பர் 16-ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கந்த சஷ்டி பெருவிழா முடியும் வரை அனைத்து பக்தர்களும் பொது தரிசன வரிசையிலேயே அனுமதிக்கப்படுவர். கந்த சஷ்டி பெருவிழாவின் போது லட்சக்கணக்கான முருக பக்தர்கள் கடற்கரை மற்றும் கோயில் வளாகத்தில் தங்கி விரதம் இருப்பது வழக்கம். இந்த நேரத்தில் கட்டண வரிசையால், பொது வரிசையில் தரிசனம் செய்யும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கவே விரைவு தரிசன கட்டண முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருவேறு வழிகளில் தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்கும் போது ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் தள்ளு முள்ளுகளைத் தடுத்து, ஒற்றை மற்றும் ஒழுங்குமுறையான பொது வரிசையின் மூலம் விரைவான மற்றும் பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்ய முடியும்.
2026-ம் ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா மற்றும் முக்கிய தேதிகள் விவரங்கள்:
• கந்த சஷ்டி விரதம் தொடக்கம்: நவம்பர் 10 (செவ்வாய்க்கிழமை)
• சூரசம்ஹாரம்: நவம்பர் 15 (ஞாயிற்றுக்கிழமை)
• திருக்கல்யாணம்: நவம்பர் 16 (திங்கட்கிழமை).
கோயிலில் விரதமிருக்கும் பக்தர்களின் வசதிக்காக கந்த சஷ்டி நாட்களில் அதிகாலை 1 மணி அல்லது 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, அபிஷேகம் மற்றும் தொடர் பூஜைகள் நடத்தப்படும். மேலும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, திருச்செந்தூர் எல்லைப் பகுதியிலேயே தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து கோயிலுக்குச் செல்ல மினி பேருந்துகள் மற்றும் ஆட்டோவைப் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோயிலுக்கு வரும் முருக பக்தர்கள் வரிசை ஒழுங்கைப் பின்பற்றி, பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து கோயில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
முருகப் பெருமானின் 2வது படை வீடான திருச்செந்தூரில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி பெருவிழா விமரிசையாக நடக்கும். கந்த சஷ்டியின் ஆறாவது நாளில் கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரம் புகழ் பெற்ற நிகழ்வாகும்.
சூரசம்ஹாரத்தின் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், இப்போதே பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருகிறது கோயில் நிர்வாகம். திருச்செந்தூர் கோயிலில் விஷேச நாட்களின் போது விரைவு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவது வழக்கமானது தான். அவ்வகையில் இப்போதும் ரத்து செய்யப்பட்டிருப்பது பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.