

சிவன் தலங்களில் அருணாச்சலேஸ்வரராக வீற்றிருக்கும் திருவண்ணாமலை, தமிழ்நாட்டின் மிகப் பிரசித்திபெற்ற கோவில்களுள் ஒன்றாகும். குறிப்பாக பஞ்சபூதத் தலங்களில் அக்னி (நெருப்பு) தலமாக இத்தலம் போற்றப்படுகிறது. சிவபெருமான் முடிவும் அடியும் இல்லாத ஜோதி ஸ்தம்பமாகக் காட்சி தந்த இடமாதலால் திருவண்ணாமலை சிவனின் திருவுருவமாகவே பக்தர்களால் வணங்கப்படுகிறது.
படைக்கும் பிரம்மாவும், காக்கும் விஷ்ணுவும் "யார் உயர்ந்தவர்?" என சண்டையிட்டனர். இச்சண்டையை தீர்க்க, சிவபெருமான் ஒரு ஜோதி பிழம்பாக உயர்ந்து நின்று, தனது அடியையோ அல்லது முடியையோ காண்பவரே உயர்ந்தவர் என்றார்.விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து அடியைக் காண முயற்சி செய்தார்.பிரம்மா அன்னப் பறவையாக மாறி முடியை தேடி மேலே பறந்தார். இருவராலும் அதனை காண முடியவில்லை. ஆனால், பிரம்மா தான் முடியை கண்டுவிட்டதாக தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல வைத்தார்.இதனால் கோபமடைந்த சிவபெருமான், பிரம்மாவுக்கு தனிக் கோயில் இருக்கக் கூடாது என்றும், தாழம்பூவை வழிபாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது என்றும் சபித்தார். சிவன் இவ்வாறு ஜோதியாக காட்சியளித்த இடமே திருவண்ணாமலை ஆகும்.
சிவன் தலங்களில் அருணாச்சலேஸ்வரராக வீற்றிருக்கும் திருவண்ணாமலை, தமிழ்நாட்டின் மிகப் பிரசித்தி பெற்ற திருக்கோவில்களுள் ஒன்றாகும். குறிப்பாகப் பஞ்சபூதத் தலங்களில் அக்னி (நெருப்பு) தலமாக இத்தலம் போற்றப்படுகிறது. சிவபெருமான் முடிவும் அடியும் இல்லாத ஜோதி ஸ்தம்பமாகக் காட்சி தந்த இடமாதலால், திருவண்ணாமலையைச் சிவனின் திருவுருவமாகவே பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.இதன் காரணமாகவே ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 14 கி.மீ. கிரிவலம் மேற்கொள்கின்றனர். சிவன் ஜோதி வடிவம் என்பதால் இங்கு நடைபெறும் கார்த்திகை தீபம் திருவிழாவின் போது மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகாதீபம் உலகப் புகழ்பெற்றது.
ஆன்மிகம், வரலாறு மற்றும் கட்டிடக் கலை ஆகிய மூன்றிலும் சிறப்புமிக்க புண்ணியத் தலமாக விளங்கும் திருவண்ணாமலை தலத்தின் கிரிவல பாதையில் அஷ்ட லிங்கங்கள், சிறப்பு வாய்ந்த கோயில்கள், ஆசிரமங்கள் மற்றும் சித்தர் மடங்கள் உள்ளது. கிரிவலம் செல்லும் பக்தர்கள் இவற்றையும் வணங்கி செல்வது வழக்கம்.
அந்த வகையில் கிரிவலம் பாதையில் அமைந்துள்ள கோவில்தான் இடுக்குப் பிள்ளையார் கோவில்.இந்தக் கோவில் குபேரன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலின் அமைப்பு வித்தியாசமானது. ஓர் அடி அகலம், 2 அடி உயரம் மட்டுமே கொண்ட கோவில் நேர்கோட்டில் அமையாத மூன்று வாசல்களை கொண்டது. பக்கவாட்டின் இருபுறமும் சுவர் உள்ளது. பின்பக்க வாசல் வழியாக நுழைந்து இரண்டாவது வாசலை தவழ்ந்தபடி அடைந்து மூன்றாவது வாசல் வழியாக வெளியே வர வேண்டும். இரண்டாவது வாசல் வழியே வெளிவர ஒருக்களித்து படுத்து கைகளை உந்தி சிரமப்பட்டு வெளிவர வேண்டியுள்ளது கவனிக்கத்தக்கது.
இந்த கோவில் பெரும்பாலும் ஓர் ஆள் கூட உள்ளே சென்று வர முடியாத நிலையில் மிகவும் குறுகலாகவே இருக்கும். அதிலும், உடல்பருமன் உள்ளவர்கள் மிகவும் சிரமப்பட்டு உள்ளே சென்று வெளியே வருவதையும் பார்க்க முடியும்.இத்தனை சிரமங்கள் இருப்பினும் இந்தக் கோயிலில் உள்நுழைந்து வந்தால் பில்லி சூனியம் அகலும், உடல் வலி, பிற நோய்கள் தீரும் என்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் நம்பிக்கையுடன் பக்தர்கள் இந்தக்கோயிலுக்குள் நுழைந்து வருகின்றனர்.
குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் இருக்கும் நந்தியையும் வெளியே உள்ள பிள்ளையாரையும் வணங்கி செல்வது வழக்கம். மேலும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்த வரும் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து குறுகிய குகை வழியே உள்ளே சென்று வெளியே வந்து வணங்கிச் செல்வது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தக் கோவிலில் நடந்துள்ள அசம்பாவிதம் மக்களிடையே இதன் மீதான கவனத்தை அதிகப்படுத்தி சில கட்டுப்பாடுகளையும் விதிக்க காரணமாகியுள்ளது. ஆம்..இடுக்கு பிள்ளையாரை தரிசனம் செய்ய சென்ற போது உடல் பருமன் காரணமாக கோவில் இடுக்கில் சிக்கி வெளியே வர முடியாமல் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் குடும்பத்துடன் கிரிவலம் சென்ற ஆந்திராவை சேர்ந்த மணிகுமார் என்பவர் இரவு நேரத்தில் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு வந்து குகை வடிவத்தில் உள்ள பகுதியில் படுத்தபடி நுழைந்துள்ளார். அவர் உடல் பருமன் கொண்டவர் என்பதால், குகை பகுதியில் இருந்து வெளியே வர முடியாமல் போகவே அச்சத்தில் தவித்துள்ளார். இதனையடுத்து மணிக்குமாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் மயக்கம் அடைந்துள்ளார்.
தொடர்ந்து அருகில் இருந்த மணிக்குமாரின் நண்பர்கள் அவரை மீட்ட முயற்சித்த நிலையில், முடியாத காரணத்தால் அலறியதால் அருகில் இருந்த பொதுமக்கள் மணிக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் பெண் ஒருவர் அதே துவாரத்தின் உள்ளே சிக்கிக் கொண்டார். அப்போது வெளியே நின்றிருந்த ஒருவர் அவரது கையைப் பிடித்து பாதுகாப்பாக வெளியே இழுத்து மீட்டார்.
இதையடுத்து, கோவில் நிர்வாகம் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.மேலும் அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம் எச்சரிக்கை தரும் விதமாக அந்த கோயில் வெளிப்புறத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "பக்தர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி இத்திருக்கோயிலின் உபகோயிலான அருள்மிகு இடுக்குபிள்ளையார் திருக்கோயிலின் வாயில் மிகக்குறுகலாக உள்ளதால் உடல் பருமன் உள்ளவர்கள் உடல் நலக்குறைவு உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், வயதானவர்கள், மூச்சுத் திணறல் அல்லது சுவாசக் கோளாறு உள்ளவர்கள், இதய நோய் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் குறுகலான இடங்களில் செல்ல சிரமம் உள்ளவர்கள் துவாரத்தின் வழியாக செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், துவாரத்தின் நுழைவுப் பகுதியில் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டு வெல்டிங் செய்யப்பட்டுள்ளன. அந்த கம்பிகளுக்கு இடையில் எளிதாக செல்லக்கூடிய பக்தர்கள் மட்டுமே துவாரத்தின் வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
பக்தர்களின் உயிர் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில் கொண்டு அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.