தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு 'தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் தெளிவுபடுத்தல்களை நிதித்துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கார்ப்பரேஷன்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்த இடைக்கால ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறத் தகுதியில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ.சித்திக் இது தொடர்பாகக் கருவூலத் துறைக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தகுதியான நபர்களுக்கான முக்கியத் தகுதிகளைப் பட்டியலிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் இடைக்கால ஓய்வூதியப் பலன்கள் அரசுத் துறைகளில் பணியாற்றும் தகுதியான பணியாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அதன்படி அரசுத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் மட்டுமே இந்த இடைக்கால ஓய்வூதியப் பலன்களைப் பெற முடியும் என்றும், உள்ளாட்சி அமைப்புகள், பல்வேறு வாரியங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இந்த இடைக்காலச் சலுகை பொருந்தாது என்று நிதித்துறை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் இடைக்கால ஓய்வூதியத்தைப் பெற வேண்டுமெனில், அரசு ஊழியர்கள் வழக்கமான காலமுறை ஊதியத்தில் (Regular Time-Scale) குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் காலமுறை ஊதியத்தில் (regular time-scale) பணியாற்றி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1, 2003 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியில் சேர்ந்து CPS திட்டத்தின் கீழ் இருந்த ஊழியர்களுக்கு இது பொருந்தும்.
தமிழக அரசுப் பணிகளில் சிறப்பு காலமுறை ஊதியத்தின் (Special Time Scale) கீழ் பணிபுரிந்த காலங்கள், முழு ஓய்வூதியம் (Full Pension) கணக்கிடுவதற்கான தகுதிபெறும் பணிக்காலமாக (Qualifying Service) எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
ஓய்வுபெற்ற பிறகு ஒப்பந்த அடிப்படையில் (Contract basis) அல்லது மறுநியமனம் (Re-employment) செய்யப்பட்டு ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு, இடைக்காலப் பணம் (Interim Relief) வழங்கப்படும் போது சில குறிப்பிட்ட நிபந்தனைகள் மற்றும் பிடித்தங்கள் (Deductions) செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர் என்ற முறையில், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடைக்காலப் பணம் ஏற்கனவே அவர்களின் ஓய்வூதியத்துடன் (Pension) சேர்த்து கணக்கிடப்பட்டு வழங்கப்படலாம்.அதே நேரத்தில், அவர்கள் மறுநியமனம் செய்யப்பட்டு பணிபுரியும் அலுவலகத்திலும் அதே இடைக்காலப் பணத்தை முழுமையாகப் பெற்றால், அது இரட்டிப்புப் பலனாக (Double Benefit) மாறிவிடும்.
எனவே, கணக்கு முரண்பாடுகளைத் தவிர்க்க, அவர்கள் மறுநியமன பதவியில் பெறும் ஊதியத்தில் இருந்து, ஓய்வூதியதாரராக அவர்கள் பெறும் இடைக்காலப் பணத்தின் மதிப்புக்கு இணையான தொகை பிடித்தம் (Adjusted/Deducted) செய்யப்படும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு கூடுதல் நிதிப்பலனும் அல்லது இடைக்காலப் பணமும், மறுநியமன ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு வழிகளில் (சம்பளம் + ஓய்வூதியம்) முழுமையாகச் சென்றடைவதைத் தடுப்பதே இந்த விதிமுறையின் முக்கிய நோக்கமாகும்.
2026 ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வுபெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த இடைக்கால ஓய்வூதியத் தொகையானது, அவர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது குறைந்தபட்சமாக ரூ.10,000 என இதில் எது அதிகமோ அந்தத் தொகை மாதந்தோறும் இடைக்காலத் தொகையாக வழங்கப்படும்.
இத்துடன், இந்த இடைக்கால ஓய்வூதியத் தொகையுடன் கூடுதலாக 60 சதவீத அகவிலைப்படி நிவாரணமும் (Dearness Relief) சேர்த்து வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.