

மது கடைகளில் கூடுதல் பணம் வசூலிப்பதை தடுக்க, 500 ரூபாய் வரை மட்டும் ரொக்க பணமாகவும், அதற்கு மேல் 'டிஜிட்டல்' பரிவர்த்தனையிலும் பெற, 'டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 4,000 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், மதுபான ஆலைகளில் இருந்து, மதுக்கடையில், 'குடி'மகன்களிடம் மது விற்பது வரை, அனைத்து செயல்பாடுகளையும், முழு கணினிமயமாக்கும் திட்ட பணியை, டாஸ்மாக் நிறுவனம், 2024-ல் செயல்படுத்தியது.
இத்திட்டத்தின் கீழ், கடையில் விற்கப்படும் ஒவ்வொரு மது பாட்டிலும், கையடக்க வடிவில் உள்ள கருவியில், 'ஸ்கேன்' செய்து விற்கப்படுகிறது. இதன் வாயிலாக, 'கியூ.ஆர். குறியீடை ஸ்கேன்' செய்து, டிஜிட்டல் முறையிலும் பணம் செலுத்தலாம்.
இருப்பினும், டாஸ்மாக் போன்ற அரசு மதுபானக் கடைகளில் தினசரி சராசரியாக ரூ.150 கோடி வரையிலும், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதைவிட அதிகமாகவும் விற்பனை உள்ள நிலையில், 80 சதவீதத்திற்கு மேல் ரொக்கப் பணமாகவே (Cash) வசூலிக்கப்படுகிறது.
அந்த பணத்தை பணியாளர்கள், கடைகளில் இருப்பு வைத்து, அடுத்த நாள் வங்கியில் செலுத்துகின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்லும் பணத்தை கொள்ளை அடிக்கும் சம்வங்களும் அடிக்கடி நடந்தேரி வருகிறது.
தற்போது, மது பிரியர்கள் தாங்கள் விரும்பும் மது வகைகளை, டாஸ்மாக் இணையதளத்தில் தேர்வு செய்து, அதன் வாயிலாகவே பணமும் செலுத்தி, அதற்கான குறியீட்டை கடைகளில் காட்டி, மது வகைகள் வாங்கலாம்.
இந்த முறையில் வாங்குவோருக்கு, மது பாட்டில்களை வழங்க தாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுகின்றன. இதற்கு, ரொக்க பணம் வசூலிக்க, பணியாளர்கள் ஆர்வம் காட்டுவதே முக்கிய காரணமாக இருப்பதாக, டாஸ்மாக் கண்டறிந்துள்ளது.
தற்போது பெரும்பாலான இடங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (UPI, கார்டுகள்) ஊக்குவிக்கப்பட்டாலும், ரொக்கமாகப் பணம் வாங்குவதில் ஊழியர்கள் காட்டும் ஆர்வம் காரணமாகவே வாடிக்கையாளர்களுக்குப் பாட்டில்களை வழங்குவதில் தேவையற்ற காலதாமதம் மற்றும் புகார்கள் ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது.
எனவே, ரொக்க பணப் புழக்கத்தை குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, கூறிய டாஸ்மாக் அதிகாரி ஒருவர், ‘கடைகளில் மது பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்கவும், சில்லரை தட்டுப்பாட்டு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிக்கப்பட உள்ளது.
இதற்காக, 500 ரூபாய் வரை மட்டுமே ரொக்க பணமாகவும், அதற்கு மேல் டிஜிட்டல் முறையில் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, விரைவில் கடைகளுக்கு அறிவுரைகள் வழங்கப்படும்’ என்றார்.
இதற்கிடையே, டாஸ்மாக் கடைகளில் 25 புதிய வகை மதுபானங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 4,000 டாஸ்மாக் கடைகளில், பிராந்தி, விஸ்கி, வோட்கா உள்ளிட்ட இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகளும், பீர், ஒயின் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் தயாரிக்கப்படும் 174 மது வகைகள், 40 பீர் வகைகள், 4 ஒயின் வகைகள் மற்றும் பிற மாநில மதுபானங்களில் 6 மது வகைகள், 5 பீர், 5 ஒயின் வகைகள் விற்கப்படுகின்றன. 538 வெளிநாட்டு ரக மது வகைகளை டாஸ்மாக் நிறுவனம் இறக்குமதி செய்து, வணிக வளாகங்களில் உள்ள மதுக்கடைகளில் விற்பனை செய்கிறது.
டாஸ்மாக் கடைகளில் அவ்வப்போது புதிய மது வகைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், புதிய வகைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக உற்பத்தியாளர்களுடன் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, 25 புதிய மது வகைகளை அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில், 25 புதிய மது வகைகள் தேர்வு செய்யப்பட்டு, விலை நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருவதால் விரைவில் மதுக்கடைகளில் புதிய வகை மதுபானங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றனர்.