

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்திற்கு பிறகு, தற்போது மீண்டும் மோதல் போக்கு தொடர்வதால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் வெளிநாட்டு மருந்துகளுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இந்த வரிச் சலுகை வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இருப்பினும் மூன்றாம் ஆண்டில் 100% மற்றும் நான்காம் ஆண்டில் 200% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்குத் தேவையான ஜெனரிக் மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9 முதல் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜெனரிக் மருந்துகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்க வரி விதிப்பால் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப், பதவி ஏற்றது முதலே உலக நாடுகளுக்கு வரி உயர்த்துவதில் குறிக்கோளாக இருந்து வந்தார். குறிப்பாக அமெரிக்காவிடம் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கவில்லை என்றால், இறக்குமதி வரியை உயர்த்துவேன் என வெளிப்படையாகவே ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.
எதற்கும் அடிபணியாத இந்தியா, தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்கி வந்தது. ஒரு கட்டத்தில் இந்தியப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை 100%-க்கும் மேல் உயர்த்தியதால், இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் இதிலிருந்து இந்தியர்களை பாதுகாக்க மத்திய அரசு வரிவிதிப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியா, அமெரிக்காவிடம் கச்சா எண்ணெயை வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து வரியைக் குறைத்தது அமெரிக்கா.
இந்நிலையில் மருந்து பொருட்களுக்கான வரி விதிப்பில் புதியதொரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார் அதிபர் டிரம்ப். இதன்படி வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு ஜெனரிக் மருந்துகளுக்கு இறக்குமதி வரி 0% என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு 2028-ல் 100% வரியும், 2029-ல் 200% வரியும் வசூலிக்கப்படும் என அதிர்ச்சியை அளித்துள்ளார் டிரம்ப்.
இந்த வரி விதிப்பு காரணமாக அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மருந்து நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் ஜெனரிக் மருந்துகளில் 40% மருந்துகள் இந்தியாவில் இருந்து தான் ஏற்றுமதி ஆகின்றன. இதனால் இந்தியாவிற்கு மீண்டும் நெருக்கடியைக் கொடுத்துள்ளார் அதிபர் டிரம்ப்.
அமெரிக்காவில் சொந்த நாட்டு மருந்து உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த வரி விதிப்பை அறிவித்துள்ளார் டிரம்ப். அதோடு வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் இறக்குமதி செய்வதைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் அமெரிக்காவில் மருந்து உற்பத்தி ஆலைகளை அமைக்காத நிறுவனங்களுக்கு இந்த வரி வசூலிப்பு தண்டனையாக விதிக்கப்படும்.
டிரம்பின் வரி விதிப்பு அறிவிப்பால், இந்திய பங்குச்சந்தைகளில் மருந்து நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. ஜெனரிக் மருந்துகளுக்கு மட்டுமே வரி விதிப்பு பொருந்தும் எனவும், காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு இந்த வரி விதிப்பு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.