

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாருடைய உதவியும் இன்றி, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களை எளிதாகக் கண்டறியும் வகையில் ‘கருடா மேப்’ (Garuda Map) என்ற புதிய செயலியைத் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் (TTD) அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமின்றி திருமலை தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்கும் வகையில் இந்த டிஜிட்டல் வழிகாட்டி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் பணக்கார கோவில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு. கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்று வரை எள்ளளவும் குறைந்தபாடில்லை.
ஏழு மலைகளின் உச்சியில் வீற்றிருக்கும் பாலாஜியை தரிசனம் செய்ய தென்மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் 24 மணிநேரம் கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலையில் உள்ளனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து (குறிப்பாக சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து) அதிக அளவிலான பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் திருப்பதிக்கு பாதயாத்திரையாகவும், சிறப்பு தரிசனத்திற்காகவும் வருகை தருவது நீண்டகால பாரம்பரியமாக உள்ளது. புரட்டாசி மாதம் முழுவதும் குறிப்பாக சனிக்கிழமைகள் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால் தரிசனத்திற்கு வழக்கத்தைவிட பல மணிநேரம் (15 முதல் 25 மணிநேரம் வரை) காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவது வழக்கம்.
இதற்கிடையே திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 12 முதல் 20-ம்தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்த நாட்களில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் தேவஸ்தானம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
குறிப்பாக, பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவை நாளில் பல்வேறு ஊர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிய வாய்ப்புள்ளதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வாகனங்கள் அனைத்தும் திருப்பதியிலேயே நிறுத்தப்பட்டு, திருமலைக்கு வாகன போக்குவரத்து தீவிரமாக கட்டுப்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில் திருமலையில் பக்தர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களை எளிதாகக் கண்டறியவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் பிரத்யேகமாக ‘கருடா மேப்’ என்ற புதிய செயலியைத் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த செயலியில் பக்தர்கள் தாங்கள் செல்ல விரும்பும் இடத்தின் பெயரை டைப் செய்தோ அல்லது தங்களது குரல் பதிவு மூலமாகவோ (Voice Command) எளிதாகத் தேடிக் கண்டறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, தலைமுடி காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் 'கல்யாண கட்டா' என்று பதிவிட்டால், திருமலையில் உள்ள அனைத்து கல்யாண கட்டாக்களின் விவரங்கள் மற்றும் அங்கு செல்வதற்கான துல்லியமான வழித்தடங்கள் திரையில் காட்டும்.
நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு நடந்து சென்றால் எவ்வளவு தூரம், வாகனத்தில் சென்றால் எவ்வளவு தூரம், மற்றும் சென்றடைய எவ்வளவு நேரம் ஆகும் என்பது போன்ற விவரங்களை இந்தச் செயலி துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் மிகக் குறைந்த நேரத்தில் எளிதாகச் சென்றடையக்கூடிய மாற்று வழிகளையும் இது பரிந்துரைக்கும்.
அனைத்து வசதிகளும் ஒரே செயலியில் :
பக்தர்களின் வசதிக்காக பல்வேறு முக்கிய இடங்களின் தகவல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன:
• கல்யாண கட்டா (Kalyanakatta)
• தரிசனங்களுக்கான நுழைவு வழிகள் & கியூ வளாகங்கள்
• தரிசனங்களுக்கான நுழைவு வழிகள் & கியூ வளாகங்கள் (Queue Complexes)
• லட்டு பிரசாதக் கவுண்டர்கள்
• பக்தர்கள் தங்கும் விடுதிகள் / அதிதி கிருகங்கள்
• உணவு கவுண்டர்கள்
• குடிநீர் மையங்கள்
• மருத்துவ மையங்கள்
• அவசர உதவி மையங்கள்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், திருமலையில் உள்ள முக்கிய இடங்கள், தங்கும் விடுதிகள், தரிசன வரிசைகள் மற்றும் கோவிலின் இதர பகுதிகளைப் பக்தர்கள் எளிதில் கண்டறிய இந்த 'கருடா மேப்' செயலி பெரிதும் உதவும்.
திருமலைக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இந்த ‘கருடா மேப்’ செயலி ஒரு மிகச்சிறந்த டிஜிட்டல் வழிகாட்டியாக அமைந்து, அவர்களது ஆன்மீகப் பயணத்தை மேலும் எளிதாக்கும் எனத் தேவஸ்தான அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடக்கும் நாட்களில் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், விஐபி பிரேக் தரிசனம் மற்றும் அனைத்து விதமான கட்டண ஆர்ஜித சேவைகளும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.