திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்திற்கு அடுத்த படியாக மிகப் பெரிய விழாவாக கருதப்படுவது ஆண்டுதோறும் நடத்தப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவாகும். பக்தர்களின் தரிசனத்திற்காக வைகுண்ட ஏகாதசி விழாவின் போது 10 நாட்களும் சொர்க்க வாசல் அல்லது வைகுண்ட துவாரம் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இலவச தரிசனத்தில் நேரடியாக திருமலையில் உள்ள வரிசையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும். அதற்கேற்ப வைகுண்ட துவார தரிசனத்திற்கான பல்வேறு தரிசன டிக்கெட்கள் வெளியிடப்படும் தேதிகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தாண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) 20 முதல் 29-ம்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சொர்க்க வாதல் வழியாக சென்று பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். அதற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள், டோக்கன்கள் வெளியீட்டு தேதியை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
வைகுண்ட துவார தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் புக்கிங் எப்போது தொடங்கும் என்று பக்தர்கள் வெகுநாட்களாக காத்திருந்த நிலையில் அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, திருப்பதியில் டிசம்பர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் தரிசன டிக்கெட்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும் 10 நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களுக்கு முன்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்து விட்டது.
வைகுண்ட ஏகாதசியின் போது வைகுண்ட துவாரம் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கான டிக்கெட் புக்கிங் தேதிகள் தனியாக அறிவிக்கப்பட்டு, நடத்தப்படுவது ஆண்டுதோறும் வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி, வைகுண்ட துவார தரிசன டிக்கெட் புக்கிங் நவம்பர் 28-ம்தேதி தொடங்கி டிசம்பர் 5-ம்தேதி நிறைவடைகிறது.
* இன்று (30-ம்தேதி) ஞாயிற்று கிழமை காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும்.
* டிசம்பர் மாதம் 1-ம்தேதி திங்கட்கிழமை முதல் 5-ம்தேதி வரை ஏகாதசி, துவாதசி என 2 நாட்கள் சொர்க்க வாசல் வழியாக சென்று பக்தர்கள் வழிபட ‘ஸ்லாட்’ இலவச தரிசன டோக்கன்களை பெற பக்தர்கள் ‘இ-டிப்’ (எலக்ட்ரானிக்ஸ் குலுக்கல்) முறையில் பதிவு செய்யலாம். இந்த பதிவு டிசம்பர் 1-ம்தேதி காலை 10 மணியில் இருந்து டிசம்பர் 5-ம்தேதி மாலை 5 மணி வரை நடக்கிறது.
* டிசம்பர் 7-ம்தேதி திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு ‘இ-டிப்’ முறை மூலம் ஸ்லாட் இலவச தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
* டிசம்பர் 8-ம்தேதி செவ்வாய்க்கிழமை காணிக்கையாளர்கள் தரிசன ஒதுக்கீட்டுக்கான டிக்கெட்டுகள் காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
வைகுண்ட ஏகாதசி, துவாதசியான டிசம்பர் 20 மற்றும் 21-ம்தேதி என 2 நாட்களில் நெறிமுறைக்கு உட்பட்ட முக்கிய பிரமுகர்களை தவிர, மற்றவர்களுக்கான விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த 2 நாட்களிலும் அதிக எண்ணிக்கையிலான சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
‘ஸ்லாட்’ இலவச தரிசன டோக்கன்கள் ‘இ-டிப்’ முறை மூலம் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல் டிசம்பர் 20, 21-ம்தேதி ஆகிய 2 நாட்களுக்கான ரூ.300 கட்டண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் டோக்கன்களை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ttps://ttdevasthanams.ap.gov.in வழியாக மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துத்துள்ளது.