

ஏன் இந்த ராஜினாமா? யார் சொல்லி இந்த துரோகம்? என தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வேட்பாளராகப் போட்டியிடும் சத்யபாமாவுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
இந்த நிலையில் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்தியபாமா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தார். இந்நிலையில் வரும் அக்டோபர் 6-ம்தேதி தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தவெக சார்பில் தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா மீண்டும் வேட்பாளராக களம் இறங்குகிறார்.
அதிமுக சார்பில் வெற்றி பெற்று தனது பதவியை ராஜினாமா செய்த சத்தியபாமா, தவெகவில் இணைந்து மீண்டும் தாராபுரம் தொகுதியில் போட்டியிடுவது, தொகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அவர் (தவெக சத்தியபாமா) தேர்தல் பிரசாரம் செய்ய செல்லும் அனைத்து இடங்களிலும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சில இடங்களில் வேட்பாளர் சத்திபாமாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர் பிரசாரம் செய்ய முடியாமல் பாதியிலேயே திரும்பி வருகிறார்.
இந்நிலையில் நல்லிபாளையத்தில் சத்தியபாமா பிரசாரம் செய்தபோது, பொதுமக்கள் மத்தியில் இருந்த ஒருவர், அதிமுக சார்பில் வெற்றி பெற்றுவிட்டு எதற்காக தவெகவுக்கு சென்றீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சத்தியபாமா, அதிமுக, திமுகவுடன் சேர்ந்து செயல்படுவது தனக்கு ஏற்புடையதாக இல்லாததால் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்ததாக தெரிவித்தார்.
ஆனால் விடாமல் தொடர்ந்து கேள்வி எழுப்பிய அந்த நபர், பணம் வாங்கிக்கொண்டு தானே தவெகவுக்கு சென்றீர்கள் என கேள்வி எழுப்ப, இதனை சற்றும் எதிர்பார்க்காத சத்தியபாமா அதை மறுத்து தெரிவித்து, நான் ஏதேனும் தவறு செய்திருந்தால், மக்களைச் சந்திக்க இங்கு எப்படி வர முடியும்? நான் யாரிடமிருந்தும் பணம் வாங்கவில்லை. ‘நான் பணம் வாங்கி இருந்தால், அதற்கான ஆதரத்தை கொடுங்கள் என்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு அந்த நபர், ‘எடப்பாடி பழனிசாமியும், முக ஸ்டாலினும் கூட்டணி தொடர்பாக பேசியதற்கான ஆதாரத்தை நீங்கள் கொடுத்தால், நான் பணம் கொடுத்ததற்கான ஆதாரத்தை கொடுக்கிறேன்’ என்று பதிலளித்தால் சத்தியபாமா அதிர்ச்சி அடைந்தார்.
இதற்கிடையே தாராபுரம் தொகுதியின் மடத்துப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில், ஏன் இந்த ராஜினாமா? யார் சொல்லி இந்த துரோகம்? வெற்றி பெற்ற பிறகு தாராபுரம் மக்களை ஏன் கைவிட்டீர்கள் சத்தியபாமா? தாராபுரம் மக்களின் கேள்வி என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் எம்எல்ஏவாக இருந்து ராஜினாமா செய்துவிட்டு, தற்போது புதிய கட்சியின் வேட்பாளராக அதே தொகுதியில் அவர் களம் காண்பதால், எதிர்க்கட்சியினரும் உள்ளூர் மக்களும் எழுப்பியுள்ள இந்த போஸ்டர் அரசியல் தாராபுரத்தில் தவெகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு எதிராகத் தாராபுரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், மறுபுறம் அவர் செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது அக்கட்சி நிர்வாகிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.