#BREAKING: முதல்வர் விஜய் ஏற்பாடு செய்த எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணித்தது திமுக மற்றும் அதிமுக..!!

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் விஜய் கூட்டிய எம்பிக்கள் கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அதிரடியாகப் புறக்கணித்தன.
தொகுதி மறுவரையறை
CM Vijay
Updated on

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு முனைப்பு காட்டி வந்தது. இருப்பினும் இதற்கு நாடு முழுவதிலும் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதாலும், மக்களவையில் போதிய ஆதரவு இல்லாததாலும் இந்த மசோதா கைவிடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த மசோதாவை மீண்டும் செயல்முறைக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு எதிராக தமிழக முதல்வர் விஜய், எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தை இன்று மதியம் ஏற்பாடு செய்திருந்தார். இதன்படி மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால் முதல்வர் விஜய் ஏற்பாடு செய்திருக்கும் எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் புறக்கணித்து உள்ளதாக அறிவித்துள்ளன.

இதையும் படியுங்கள்:
4 நாட்களில் ரூ.6,120 உயர்வு..! இல்லத்தரசிகளுக்கு இடியை இறக்கிய தங்கம் விலை.!
தொகுதி மறுவரையறை

கூட்டத்தை புறக்கணித்தவர்கள்:

திமுகவின் மக்களவை எம்பிக்கள் 22 பேர், மாநிலங்களவை எம்பிக்கள் 8 பேர் மற்றும் அதிமுக மாநிலங்களவை எம்பிக்கள் 4 பேர் என மொத்தம் 34 பேர் முதல்வர் விஜய்யின் இந்தக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். இந்த விஷயத்தில் திராவிட கட்சிகள் ஒரே மாதிரியான முடிவை எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பாமக, மநீம மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா 1 எம்பி என மொத்தம் 3 மாநிலங்களவை எம்பிக்களும் முதல்வரின் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

இதன்படி மொத்தமுள்ள 57 எம்பிக்களில் 37 எம்பிக்கள் முதல்வர் விஜய்யின் எம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
திடீர் விசிட்: பாதுகாப்பு வளையத்தில் திருவண்ணாமலை.. போலீஸ் அதிரடி!
தொகுதி மறுவரையறை

கூட்டத்தில் பங்கேற்பவர்கள்:

காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்பிக்கள் 9 பேர், மாநிலங்களவை எம்பிக்கள் 3 பேர் என மொத்தம் 12 பேரும் விஜயின் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

அதேபோல் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா 2 மக்களவை எம்பிக்கள் என மொத்தம் 6 பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

மதிமுக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா 1 மக்களவை எம்பி என மொத்தம் 2 பேர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

ஆக மொத்தம் முதல்வர் விஜய் இன்று கூட்டும் எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தம் 20 எம்பிக்கள் பங்கேற்க உள்ளனர்.

முதல்வய் விஜய்யின் கூட்டத்தில் பங்கேற்கும் என் பூக்கள் அனைவரும் தவெக கூட்டணியில் இணைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனிமொழி எம்.பி.
Kanimolhi

திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பி-யுமான கனிமொழி கூறுகையில், “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் முநதைய நிலைப்பாட்டில் எவவித மாற்றமும் இல்லை. இதில் மேற்கொண்டு விவாதிக்கவும் எதுவும் இல்லை. நாடாளுமன்ற எம்பிக்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் தவெக அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது. மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட சொன்னால், எம்பிக்கள் கூட்டத்தை கூட்டுகிறார் முதல்வர்” என கனிமொழி தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தை திசை திருப்பவே முதல்வர் விஜய் எம்பிக்கள் கூட்டத்தை கூட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

37 எம்பிக்கள் புறக்கணித்த இந்தக் கூட்டத்தில் முதல்வர் விஜய் என்ன சொல்லப் போகிறார் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும் திராவிட கட்சிகள் புறக்கணித்த பிறகு, இந்தக் கூட்டம் நடைபெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com