அரசு பேருந்துகளின் மூலம் கட்சியை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் தவெக-க்கு இல்லை: அமைச்சர் விளக்கம்!

புதிய அரசு பேருந்து நிறம் குறித்த சர்ச்சை என்ன?
அரசுப் பேருந்து
TVK
Updated on

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்று, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த மே 10-ம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய்யின் தலைமையில், வருகின்ற ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு தேதிகளில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட்டின் மீது பொதுமக்கள் ஏராளமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு பட்ஜெட்டில் வெளிவரும் என இல்லத்தரசிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அரசு சார்பில் வாங்கப்பட்டு, வேலைப்பாடு நடந்து வரும் மினி பேருந்துகளில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் அடிக்கப்பட்டதால், ஆளுங்கட்சி தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்கு துறை சார்ந்த அதிகாரிகளும், மின்துறை அமைச்சர் நிர்மல் குமாரும் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்

இதையும் படியுங்கள்:
பேருந்து பயணத்தில் பெண்களுக்கு அசௌகரியமா.? உடனே இந்த பட்டனை தட்டுங்க.!
அரசுப் பேருந்து

பொதுவாக அரசுப் பேருந்துகளில் பூசப்படும் வண்ணங்கள் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளால் வழக்கமான நடைமுறைப் படி தான் தேர்ந்தெடுக்கப்படும். அரசுப் பேருந்துகள் ஏற்கனவே பச்சை, நீலம் மற்றும் சிவப்பு உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் முழு ஒப்புதலுடன் இறுதி செய்யப்படும் வண்ணங்களையே அரசுப் பேருந்துகளுக்குப் பயன்படுத்துவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி அரசுப் போக்குவரத்து துறை மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட உள்ள புதிய மினி பேருந்துகளுக்கும் வழக்கமான நடைமுறைப்படியே வண்ணங்கள் பூசப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் “தமிழக வெற்றிக் கழகம் பொதுமக்கள் மத்தியில் பரவலாகச் சென்று விட்ட ஒரு கட்சி. அரசுப் பேருந்துகளின் மூலம் கட்சியை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியமே தவெக-வுக்கு இல்லை. தவெக மக்களிடம் விரைவாக சென்றடைந்ததது அனைவருக்குமே தெரியும். போக்குவரத்து துறை அதிகாரிகளே இத்தகைய வண்ணங்களைப் பயன்படுத்தி இருப்பார்கள்” என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

அரசுப் பேருந்து
Nirmal kumarImage credit: ANI
இதையும் படியுங்கள்:
ISO சான்றை தட்டி தூக்கிய தமிழ்நாட்டின் முதல் அரசுப் பள்ளி.! சாதனை படைத்த சேலம் மாவட்ட ஆசிரியர்கள்.!
அரசுப் பேருந்து

இதற்கு முன்னதாக அரசுப் பேருந்துகளின் முன்பகுதியில் உள்ள டிஜிட்டல் பலகைகளில் தவெக கட்சியின் பெயர்கள் ஓடியது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதோடு சமீபத்தில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரமும் தொடர்ச்சியாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

புதிதாக இயக்கப்பட உள்ள சுமார் 300 மினி பேருந்துகள் மஞ்சள் மற்றும் சிவப்பு உள்ளிட்ட புதிய வண்ணக் கலவையில் தயாராகி வருகின்றன. இந்தப் பேருந்துகள் அனைத்தும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்காக தயாரிக்கப்பட்டு வருகிறது. புதிய மினி பேருந்துகளுக்கு பாடி கட்டும் பணிகள், திருச்சியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பேருந்துகளின் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தப் பேருந்துகள் வெகு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. ஏற்கனவே சென்னையில் 300 பேருந்துகளை அறிமுகப்படுத்திய முதல்வர் விஜய், மினி பேருந்துகளையும் அறிமுகப்படுத்த இருக்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com