

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை இடங்களை வென்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் தவெக பெரும் வெற்றியைப் பெற்று, சட்டமன்றத்தில் தனது பலத்தைக் கூட்டியது.
திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 2 தொகுதிகளில் தேர்தல் நடத்தலாம் என உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மற்ற 3 தொகுதிகளில் தேர்தல் வழக்கு முடிந்த பிறகே இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பால் தமிழ்நாட்டில் மீண்டும் இடைத்தேர்தல் சூடு ஆரம்பிக்கத் தொடங்கி விட்டது. இந்நிலையில் பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகள் மட்டுமின்றி, கொளத்தூர் தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்குத் தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் கூட இதைப் பார்க்க முடிந்தது. இந்நிலையில் வரப்போகும் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக-வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை தொகுதிகளில் இதற்கு முன்னதாக அதிமுக தான் வென்றது. அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விட்டு தவெக-வில் இணைந்த நிலையில், தவெக சார்பில் ராஜினாமா செய்தவர்களுக்கே சீட்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே ராஜினாமா செய்த இருவருக்குத் தான் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் தவெக வாய்ப்பு வழங்கியது.