

தமிழ்நாட்டின் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ. 2,500 உரிமைத் தொகை வழங்கப்படும் என தவெக கொடுத்த தேர்தல் உத்தரவாதம் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின் தலைமையிலான முந்தைய திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவி வழங்கப்பட்டு வந்தது. ஏழை பெண்கள் பொருளாதார ரீதியாக வாழ்வில் உயர கொண்டு வரப்பட்ட கலைஞர் உரிமை திட்டம் மக்களால் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. குடும்பத் தலைவிகளின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்வதற்காகவும் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. 2023 செப்டம்பர் 15-ம்தேதி தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் இதுவரை சுமார் 1.31 கோடி பெண்களை பயனாளிகளாக உள்ளனர்.
முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகையானது, ரூ. 2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.
அதாவது தேர்தல் நெருங்கிய நிலையில், திமுக மற்றும் அதிமுக சார்பில் தற்போது வழங்கப்படும் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தவெக சார்பில் மாதம் ரூ.2500 வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. அதாவது, 60 வயது வரை உள்ள அனைத்து மகளிர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.
எனவே தற்போது வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகையின் பெயர் உடனடியாக மாற்றப்பட்டு மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதமே ரூ.2500 உயர்த்தி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடையே நிலவியது.
தற்போது வரை திமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டு வந்த ரூ.1000 மட்டுமே கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், விஜய் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்த பெண்களுக்கான 2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என பொதுமக்களும், எதிர்கட்சியினரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான ரமேஷ், தனது தொகுதி மக்களுக்கான குறைத் தீர்ப்பு முகாம் நடத்தினார். இதில் பொதுமக்களிடம் இருந்து அவர் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரமேஷ், முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த ஆட்சியில், மக்களின் தேவைகளைப் பெரும்பாலும் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நல்லாட்சியாகவே இது இருக்கும். ஒரு மனு கொடுத்தால் அதை உடனே நிறைவேற்ற முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் கண்டிப்பாக அந்த மனுவுக்கு உரிய நடவடிக்கையை எடுப்போம். ஆனால் அதற்கு கொஞ்சம் கால அவகாசம் மட்டும் கொடுங்க. கண்டிப்பாக நம்ம முதலமைச்சர் விஜய் எல்லாருக்கும் எல்லாம் செய்து கொடுப்பார்.
மகளிர் உரிமைத் தொகைக்காக நிறைய பேர் மனு கொடுக்கின்றனர். இதனை அனைத்தையும் நாங்க பரிசீலித்து வருகிறோம்.
மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கோரிக்கை மனுவோடு இருப்பவர்கள், அதனை கொடுப்பதற்காக காத்திருக்க வேண்டாம். தமிழ்நாடு முதலமைச்சர், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500 கொடுப்பதை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார்.
அந்தத் திட்டத்தை முதல்-அமைச்சர் கையெழுத்திட்டு தொடங்கும்போது, நிச்சயம் உங்களின் அனைத்து பெயர்களும் அந்தத் திட்டத்தில் இடம் பெறும். குறிப்பாக இதுவரை உரிமைத் தொகை பெற்று வருவோரின் பெயர்கள், இதுவரை உரிமைத் தொகை வாங்காமல் இருந்தாலும், அனைத்து குடும்பத் தலைவிகளின் பெயரும் மொத்தமாக முதலமைச்சர் விஜய் இதற்கான அறிவிப்பை வெளியிடும் போது ஆட்டோமேட்டிக்காக எல்லாருக்கும் பணம் வந்துவிடும். எனவே இதற்காக யாரும் தனித் தனியாக மனு கொடுக்க தேவையில்லை.
இன்னும் பட்ஜெட் நாங்க தாக்கல் செய்யவில்லை. விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறினார்.