

பிறவியிலேயே கருப்பை இல்லாத குறைபாட்டைக் கொண்ட ஒரு பெண், இறந்த ஒரு கொடையாளரின் கருப்பையை தானமாக பெற்று, கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் லண்டனை சேர்ந்த 34 வயதான கிரேஸ் பெல் என்ற பெண்ணிற்கு பிறவியிலேயே கருப்பை இல்லை. இது MRKH நோய்க்குறி எனப்படும் ஒரு நிலை, இது இங்கிலாந்தில் 5,000 பெண்களில் ஒருவரை பாதிக்கிறது.
பெல்லுக்கு 16 வயது இருக்கும் போது தான், அவருக்கு சொந்தமாக குழந்தையைச் சுமக்க முடியாது என்று கூறப்பட்டதாகவும், அன்று மருத்துவமனையில் அழுததாகவும் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கூறியுள்ளார். ஒரு குழந்தையைப் பெற, பெல் தம்பதியினருக்கு இருந்த ஒரே வழி கருப்பை மாற்று அறுவை சிகிச்சையை நம்புவது அல்லது வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதுதான்.
இந்நிலையில், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 40 வயது பெண் ஒருவரின் கருப்பை, கடந்த 2024-ம் ஆண்டு இவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. லண்டன் இம்பீரியல் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இந்த கருப்பை மாற்று அறுவை சிகிச்சை (Uterus Transplant)சுமார் 10 மணி நேரம் நீடித்தது.
கருப்பை பொருத்தப்பட்ட சில மாதங்களிலேயே கருத்தரித்த கிரேஸ் பெல், தற்போது எவ்வித பாதிப்புமின்றி ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். "இறந்த பின்பும் ஒரு பெண்ணால் இன்னொருவருக்கு தாய்மையைத் தர முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என டாக்டர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம், மேற்கு லண்டனில் உள்ள குயின் சார்லோட் மற்றும் செல்சியா மருத்துவமனையில், கிட்டத்தட்ட 7 பவுண்டுகள் எடையுடன், பெல்லுக்கு ‘ஹ்யூகோ பவல்’ (Hugo) என்ற ஆண் குழந்தை பிறந்தது.
இது UK-வில் இறந்தவரின் கருப்பை மூலம் பிறந்த முதல் குழந்தை ‘இது ஒரு அதிசயம்’என அழைக்கப்படுகிறது.
மேலும், ‘எனக்கு கருப்பை தானம் கொடுத்த நன்கொடையாளரையும் அவரது குடும்பத்தினரையும் நான் ஒவ்வொரு நாளும் நினைத்துப் பார்க்கிறேன், அவர்களின் மகள் எனக்கு மிகப்பெரிய பரிசைக் கொடுத்துள்ளார். அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்திக்கிறேன்’ என்று பெல் கூறினார்.
இறந்த இளம் பெண்ணால் வழங்கப்பட்ட அவரது கருப்பை கூடுதலாக, அவர் நான்கு பேருக்கு ஐந்து உறுப்புகளை பொருத்தி, அவர்களின் உயிரைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது.
லண்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு மருத்துவக் குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த IVF சிகிச்சை மற்றும் பிரசவம் சாத்தியமானது. ஏற்கனவே உயிருள்ள உறவினர்களிடம் இருந்து பெறப்பட்ட கருப்பை மூலம் ஒரு குழந்தை பிறந்த நிலையில், தற்போது இறந்த பெண்ணின் கருப்பை தானம் மூலம் ஹ்யூகோ(Hugo) பிறந்தது இதுவே முதல் முறையாகும்.
உலகளவில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சைகள் மிகக் குறைவாகவே நடந்துள்ள நிலையில், பிரித்தானியாவின் இந்த வெற்றி, மருத்துவத் துறையில் புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மேலும் கருப்பை இல்லாத பெண்களுக்கு தாயாகும் வாய்ப்பை வழங்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சம்பந்தப்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள், இந்த பிறப்பு ‘ஒரு புரட்சிகரமான தருணம்’ என்றும், இது போன்ற அறுவை சிகிச்சைகள், கருப்பை இல்லாத அல்லது கருப்பை சரியாகச் செயல்படாத பெண்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் என்றும் கூறினர்.