

அரசு வேலை பல இளைஞர்களின் கனவாக உள்ள நிலையில், அதற்கு உதவும் வகையில் தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களைசெயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் பெரும்பாலும் டிஎன்பிஎஸ்சி-யால் நிரப்பப்பட்டு வருகின்றன. இதுதவிர மத்திய அரசு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பையும் யுபிஎஸ்சி அவ்வப்போது அறிவிக்கிறது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழக இளைஞர்களுக்கு இருக்கும் ஆர்வம், யுபிஎஸ்சி தேர்வில் இல்லை என்றே சொல்லலாம். மத்திய அரசின் யுபிஎஸ்சி மற்றும் ஆர்ஆர்பி தேர்வு வாரியங்கள் நடத்தும் தேர்வுகளை தமிழ்நாட்டில் இருந்து வெகு சிலரே எழுதுகின்றனர்.
மத்திய அரசு வேலைக்கு தமிழ்நாட்டில் இருந்து அதிகளவிலான இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தி தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக தமிழ்நாடு அரசின் யு.பி.எஸ்.சி. ஆளுமைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (நவம்பர் 20) இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணையில் “தமிழ்நாடு அரசானது ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் யு.பி.எஸ்.சி குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், 2026-ஆம் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50,000 ரூபாய் நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2026) யு.பி.எஸ்.சி குடிமைப்பணி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், (https://skilldevelopment.tn.gov.in/) ஆன்லைன் மூலம் 21.11.2026 முதல் 30.11.2026 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை விவரம்:
* மத்திய அரசின் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் (Prelims) தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வுக்கு (Mains) தயாராகி வரும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் (Mains) தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் தமிழக மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
தகுதிகள்:
* தமிழக அரசின் ஊக்கத்தொகையைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
* யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் தேர்வின் முதல்நிலை அல்லது முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும்.
தகுதியுள்ள தமிழக மாணவர்கள் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://skilldevelopment.tn.gov.in/) வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
21.11.2026 முதல் 30.11.2026 வரை.
யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்கள் தமிழக அரசின் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.