

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் கடந்த 5 மாதங்களைக் கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 60 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், அதுவும் முடியப் போகிறது. இந்நிலையில் விரைந்து போரை முடிக்க இரு நாடுகளும் முற்பட வேண்டும் என ஐநா அறிவுறுத்தியது.
ஆனால் அமெரிக்கா எதற்காக இந்தப் போரை தொடங்கியதோ அந்த காரணத்தில் இருந்து விலகி, தற்போது ஹார்மூஸை கைப்பற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கிறது. அதேசமயம் ஹார்மூஸை விட்டுத் தர ஈரானும் தயாராக இல்லை.
ஓமனுடன் இணைந்து ஹார்மூஸுக்கு தனியாக ஒரு கடல் வழிப் பாதையை உருவாக்க ஈரான் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஓமனும் ஒப்புதல் அளித்துள்ளது. ஹார்மூஸ் விவகாரத்தில் ஈரானுக்கு உதவினால், ஓமன் மீது குண்டு வீசுவோம் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இருப்பினும் கூட ஓமனும், ஈரானும் ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரத்தில் தீவிரமாக உள்ளன.
அமெரிக்கா ஈரான் மீது கடுமையான தடைகளை விதிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து, ஹார்மூஸ் வழியாக ஒரு சொட்டு எண்ணெயை கூட ஏற்றுமதி செய்ய முடியாது என ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை முடக்கவே அமெரிக்கா போரைத் தொடங்கியது. ஆனால் இப்போது ஹார்மூஸ் ஜலசந்தி அமெரிக்காவின் ஒரு பகுதி என அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதன்மூலம் ஹார்மூஸை கைப்பற்ற டிரம்ப் திட்டம் தீட்டி வருகிறார். ஆனால் இதனைப் பார்த்துக் கொண்டு ஈரான் சும்மா இருக்காது. ஆகையால் இரு நாடுகளுக்கு இடையேயான போர் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
ஈரானின் வாழ்வாதாரத்தை முடக்கும் விதமாக Economic D-Day என்ற பெயரில் புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஒருவேளை தடைகள் விதிக்கப்பட்டால், கச்சா எண்ணெய் ஏற்றுமதி முழுமையாக முடக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளைகுடா நாடுகளில் இருந்து, ஹார்மூஸ் வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெயை கூட யாராலும் கொண்டு செல்ல முடியாது என்வும் ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் Economic D-Day தடை அறிவிப்பு மற்றும் ஈரானின் எச்சரிக்கை ஆகியவற்றால் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பதற்றம் உலகப் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும் என மற்ற நாடுகள் அதிர்ச்சியில் உள்ளன.
குறிப்பாக ஈரானின் எச்சரிக்கை மட்டும் நடந்து விட்டால், மீண்டும் உலக நாடுகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என்பது உறுதி
ஹார்மூஸை கடந்து செல்லும் கப்பல்கள் விதிமுறைகளை மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. இதன்படி விதிகளை மீறும் கப்பல்களுக்கு அபராதம், சிறைபிடித்தல் மற்றும் பறிமுதல் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்படும். அதோடு இந்தக் கப்பல்கள் கருப்பு பட்டியலிலும் இணைக்கப்படும்.
கருப்பு பட்டியலில் உள்ள கப்பல்களுடன் வர்த்தகப் போக்குவரத்து வைத்துக் கொள்ளும் கப்பல்களையும் கருப்பு பட்டியலில் சேர்த்து விடுவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹார்மூஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான், அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இன்னும் சில தினங்களில் இந்தப் போர் தீவிரமடைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே அமெரிக்கா - கனடா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் போரும் தீவிரமடைந்தால், வர்த்தக சந்தை பெருமளவு பாதிப்பை சந்திக்கக் கூடும்.