

இந்தியாவின் பொதுப்போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற பெருமை மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கே சேரும். பேருந்து, மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில் சேவை என இந்தியாவின் போக்குவரத்து துறை பொதுமக்களுக்கு தொடர்ந்து பயனளித்து வருகிறது.
நகரப் பகுதிகளுக்குள் விரைவான போக்குவரத்தை முன்னெடுக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்த போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இந்திய மெட்ரோ ரயில் சேவையை அமெரிக்க பெண் ஒருவர் பாராட்டியுள்ளார். மும்பை மெட்ரோவில் பயணித்த அமெரிக்க பெண், இந்திய நாட்டின் மெட்ரோ ரயில் சேவை அமெரிக்காவை விடச் சிறந்ததாக உள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 8-ல் மும்பை மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதன்படி வெர்சோவா - அந்தேரி - காட்கோபர் வழித்தடத்தில் முதல் கட்ட மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவின் முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகமானது.
இந்நிலையில் நேற்று அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் மும்பை மெட்ரோவில் பயணம் செய்துள்ளார். அப்போது இந்திய மெட்ரோ ரயில் சேவை குறித்து நேர்மறையான தனது அனுபவத்தை வீடியோ மூலம் பகிர்ந்து கொண்டார்.
அமெரிக்க பெண் பகிர்ந்த வீடியோவில், “அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மெட்ரோ ரயில் சேவையுடன் ஒப்பிட்டால், மும்பை மெட்ரோ சேவை பலமடங்கு தூய்மையாக இருக்கிறது. மும்பை மெட்ரோ ரயிலின் தரம், பராமரிப்பு மற்றும் அதிநவீன வசதிகள் உலகத் தரத்தில் உள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்கள் மட்டுமின்றி, ரயில்களின் உள்ளேயும் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. நெரிசல் மிகுந்த மும்பை மாநகரில் குளுகுளு வசதியுடன், வேகமான மற்றும் சௌகரியமான பயணத்தை அனுபவிக்க முடிகிறது. அதோடு டிக்கெட் கட்டணமும் குறைவாக உள்ளது. நான் எடுத்த டிக்கெட்டின் விலை வெறும் 20 ரூபாய் தான்.
அழுக்கடைந்த நியூயார்க் சப்வே ரயில்களைக் காட்டிலும், மும்பை மெட்ரோ தூய்மையாக இருப்பதைக் காணும் போது வியப்பாக உள்ளது. இந்திய ரயில்களில் பெண்களுக்காக தனிப்பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான வசதி உலகின் வேறு நாடுகளிலும் இல்லை. பொதுப் போக்குவரத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க பெண் ஒருவர், இந்தியாவில் மாத்திரை மற்றும் மருந்துப் பொருட்களின் விலை மிகக் குறைவாக இருக்கிறது என பதிவிட்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட மருந்து பொருளின் விலை அமெரிக்காவில் 1 லட்சம் ரூபாய் வரை விற்கப்பட்டது. அதே மருந்து இந்தியாவில் வெறும் 2,000 ரூபாய்க்கே கிடைக்கிறது என்றும் அவர் பதிவிட்டு இருந்தார்.
இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மற்றொரு அமெரிக்க பெண், அவர்கள் நாட்டு ரயில் சேவையைக் காட்டிலும் இந்தியாவின் மெட்ரோ ரயில் சேவை மிகத் தூய்மையாக இருக்கிறது என்பதை தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் இந்தியாவின் பொதுப் போக்குவரத்து நேர்மறையான பிம்பத்தை உருவாக்கியுள்ளது.
மெட்ரோ ரயில் சேவை ஒருபுறம் இருக்க, வெகு விரைவில் புல்லட் ரயில் சேவையையும் இந்தியா தொடங்கவுள்ளது. இதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.