

சென்னையில் பறக்கும் ரயில் சேவை தற்போது கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை பயன்பாட்டில் உள்ளது. தொடக்க காலத்தில் பறக்கும் ரயில் சேவையைத் திட்டமிட்ட போது, 3 கட்டங்களாக பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதன்படி கடற்கரை முதல் மயிலாப்பூர் வரை முதல் கட்டப் பணிகளும், மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வரை இரண்டாம் கட்டப் பணிகளும், வேளச்சேரி முதல் பரங்கிமலை மூன்றாம் கட்டப் பணிகளும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதில் முதல் இரண்டு கட்டப் பணிகள் வெற்றிகரமாக முடிந்து பறக்கும் ரயில் சேவை மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால் மூன்றாம் கட்ட பணிகள் நில ஆக்கிரப்பில் ஏற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தால் பாதியிலேயே கைவிடப்பட்டு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றது.
இந்நிலையில் வருகின்ற ஜனவரி மாதம் முதல் வேளச்சேரி டூ பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1984 ஆம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூர் வரையிலான முதல் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு 1995-ல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வலையிலான இரண்டாம் கட்டப் பணிகள் 1998 ஆம் ஆண்டில் தொடங்கி 2004-ல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
இதற்கு அடுத்ததாக வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை பணிகள் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட ரூ.495 கோடி செலவில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் கிட்டத்திட்ட 4.5 கிலோமீட்டர் பணிகள் முடிவடைந்த நிலையில், மீதமிருந்த 1/2 கிலோமீட்டருக்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள், நில ஆக்கிரமிப்பு பிரச்சனையால் பாதியில் நிறுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிமன்றம் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் வருகின்ற 2026 ஜனவரி மாதம் முதல் வேளச்சேரி டூ பரங்கிமலை ரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் வரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நீண்ட நாட்களாக பயணிகள் எதிர்பார்த்த இந்தப் போக்குவரத்து, தற்போது பயன்பாட்டிற்கு வரவுள்ளதால் சென்னை மக்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்த பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு வேளச்சேரி டு பரங்கிமலை வழித்தடத்தில் சோதனை முயற்சியாக சரக்கு ரயில் சேவை இயக்கப்பட்டது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள அறிக்கையில், “வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான ரயில் வழித்தடப் பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. ஏற்கனவே சரக்கு ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், அடுத்த மாதம் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையின் கீழ் பயணிகள் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
பிறகு ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெற்றதும் வருகின்ற ஜனவரி மாதம் முதல் வேளச்சேரி டூ பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.