

இந்தியத் திரையுலகின் தலைசிறந்த பின்னணிப் பாடகியும், ‘தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவருமான எஸ். ஜானகி (88), வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மைசூருவில் காலமானார். இத்தகவலை அவரது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். அவரது மறைவுச் செய்தி திரை உலகினரையும், இசை ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது தனித்துவமான காந்தக் குரலால் பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்தவர். இனிமையான உச்சரிப்பு, பாடும்போது அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் மற்றும் சிரிப்புச் சத்தம் என அனைத்தும் அவரது பாடல்களுக்கு அலாதியான அழகைக் கொடுத்தன.
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பிறந்த எஸ். ஜானகி, தனது 17-வது வயதில் சலபதிராவ் இயக்கத்தில் வெளியான 'விதியின் விளையாட்டு' (1957) என்ற படத்திற்காக 'பெண் என் ஆசை பாழானது' என்ற தனது முதல் பாடலை பாடியதன் மூலம் திரையுலகில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார்.
தனது 70 ஆண்டு கால இசைப் பயணத்தில், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் சுமார் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழ் சினிமாவின் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
இசையுலகிற்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்பிற்காகப் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். இவர் சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை நான்கு முறையும், 33 முறை மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு இவருக்கு நாட்டின் உயரிய விருதான ‘பத்ம பூஷன்’ விருதை இந்திய அரசு அறிவித்தபோது, அவ்விருது தனது 55 ஆண்டுகால அனுபவத்திற்கு தாமதமாக வழங்கப்படுவதாகக் கூறி அதை ஏற்க மறுத்து நிராகரித்தார்.
குழந்தை முதல் முதியவர் வரை, நகரத்து பெண் முதல் கிராமத்து கதாபாத்திரம் வரை, ஒவ்வொருவரின் உணர்வுக்கும் ஏற்றவாறு தனது குரலை மாற்றி பாடும் திறன் அவருக்கு இருந்தது. இதுவே அவரை மற்ற பாடகர்களிடமிருந்து தனித்துவப்படுத்தியது. அதனால் தான் எஸ். ஜானகியின் பாடல்கள் வெறும் இசையாக இல்லாமல், தலைமுறைகளை இணைக்கும் இனிய நினைவுகளாக இன்று வரை ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. காலங்கள் கடந்தாலும் நம்மைவிட்டு அந்த காந்த குரல் என்றென்றும் நீங்காது.. கரையாது.. குறையாது...!!!
கடந்த 2016-ம் ஆண்டு திரையுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், அதன் பிறகு தனது சொந்த ஊருக்குத் திரும்பினார்.
இவரின் கணவர் ராம் பிரசாத் கடந்த 1997-ம் ஆண்டு காலமானார். இவரது மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி மாதம் காலமானார்.
அவரது மறைவுக்கு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் விஜய், ‘இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, ‘தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று ரஜினிகாந்த் பதிவிட்டிருக்கிறார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ‘பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ‘பிரபல பின்னணி பாடகி திருமதி. S ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரை மற்றும் இசைத் துறைகளைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என்று பதிவிட்டிருக்கிறார்.
‘இசைக்குயில் எஸ்.ஜானகி மறைந்த செய்தி வருத்தமளிக்கிறது. எம்.எஸ். விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய ஜானகி அவர்களது இசைப்பயணம் மிக நீண்டது.
இனிமையும் இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார்’ என முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
நடிகை சிம்ரன் தனது இரங்கல் செய்தியில், ‘சில குரல்கள் என்றென்றும் நம் வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிடுகின்றன; அதில் ஜானகி அம்மாவின் குரலும் ஒன்று. அவர் தனது குரல் மூலமாக உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தார்; பல தலைமுறைகள் என்றென்றும் நினைவில் போற்றிப் பாதுகாக்கும் அழகான நினைவுகளை உருவாக்கினார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது; உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் அம்மா... ஓம் சாந்தி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபலப் பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவையடுத்து, கவிஞர் வைரமுத்து தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் கவிதை வடிவில் வெளியிட்டுள்ளார். அரைநூற்றாண்டு காலமாகத் தனது குரலால் மக்களுக்கு ஆறுதலாக விளங்கிய பாடகி ஜானகியின் மறைவு குறித்துக் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ள கவிதாஞ்சலியில்,
"கானக் குயிலே
காலமானாயா?
அரைநூற்றாண்டு
ஆறுதலே
அடங்கிவிட்டாயா?
‘சிங்கார வேலனே தேவா’வில்
நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய
கீதவாணியே
முடிந்துவிட்டதா உன் மூச்சு?
தாய்மையாய் தமிழாய்
காதலாய் கருணையாய்
கண்ணீராய் புன்னகையாய்
எங்கள் வாழ்வோடு கலந்த
பாட்டரசி
உனக்கும் மரணமா?
‘நாதம் என் ஜீவனே’ என்றாயே
உன் நாதம் இருக்கிறது
ஜீவன் இல்லையே..."
என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது தனித்துவமான குரலால் இந்திய இசைத்துறையில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கிய எஸ். ஜானகியின் மறைவு, இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சமீபத்தில் தான் பாக்கியராஜ், பாரதிராஜா என்ற இரண்டு சினிமா ஆளுமைகளை இழந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து இப்போது பாடகி ஜானகியும் மறைந்தது பலரையும் வருத்தம் அடைய வைத்திருக்கிறது.
எஸ்.ஜானகியின் இறுதிச் சடங்கு இன்று (ஜூலை 12) மைசூரில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.