

தமிழ்நாட்டில் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கிராமத்தில் வசிக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்திற்கு இன்று (அக்டோபர் 31) ரூ.109.75 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் தமிழ்நாடு முழுக்க 30,000 பெண்கள் பயனடைவார்கள்.
சமீபத்தில் பெண்களுக்கு பேருந்து பயணத்தை இலவசமாக்கும் வகையில், வெற்றிப் பயணம் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அடுத்ததாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது.
திருமணமாகும் பெண்களின் திருமண செலவைக் குறைக்கும் வகையில் 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மேலும் இரு தினங்களுக்கு முன்பு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.57 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
பெண்களுக்காக அடுத்தடுத்து சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, தற்போது வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்திற்கும் நிதியை ஒதுக்கியுள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
நிதி ஒதுக்கீடு: வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ.109.75 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
பயனாளிகள்: தமிழ்நாடு முழுவதும் உள்ள 30,000 கிராமப்புறப் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவர்.
வழங்கப்படும் உதவி: கிராமப்புறத்தில் உள்ள ஒவ்வொரு தகுதியான பெண் பயனாளிகளுக்கும் 100% மானியத்தில் தலா 5 வெள்ளாடுகள் அல்லது 5 செம்மறி ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.
யாருக்கெல்லாம் முன்னுரிமை வழங்கப்படும்:
* கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்
* ஆதரவற்ற விதவைகள்
* மாற்றுத்திறனாளிகள்
* திருநங்கைகள்
* வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள்
தகுதிகள்:
* கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்கள் வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.
* 18 முதல் 60 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
* இதற்கு முன்னர் அரசின் விலையில்லா கறவை மாடு அல்லது ஆடு வளர்ப்புத் திட்டத்தில் பயன் பெற்றவராக இருத்தல் கூடாது.
* ஆடுகளை வளர்க்க குறைந்தபட்சம் கொட்டகை அமைத்து பராமரிக்கும் ஆர்வம் இருக்க வேண்டும்.
* குடும்பத்தில் யாரும் அரசுப் பணிகளில் இருக்கக் கூடாது.
தேவையான ஆவணங்கள்:
* ஆதார் கார்டு
* ரேஷன் கார்டு
* புகைப்படம்
சிறப்புச் சான்றுகள் (பொருந்தினால் மட்டும்):
* கணவரால் கைவிடப்பட்டதற்கான சான்று
* விதவைச் சான்றிதழ்
* மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல்
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின் விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெகு விரைவில் கால்நடை பராமரிப்புத் துறை வாயிலாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடுகள் கொள்முதல்:
தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு பணம் நேரடியாக வழங்கப்பட மாட்டாது. தமிழக அரசு அமைக்கும் சிறப்புக் குழுவின் மூலம் நல்ல தரமான 5 ஆடுகள் சந்தையில் கொள்முதல் செய்யப்படும்.
கொள்முதல் செய்யப்படும் அனைத்து ஆடுகளுக்கும் அரசு செலவிலேயே காப்பீடு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களிடம் நேரடியாக ஒப்படைக்கப்படும்.