

தமிழ்நாட்டில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. தமிழக இடைத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தவெக சார்பில் முதல்வர் விஜய் மற்றும் அஜித் இருவரும் ஒன்றாக இணைந்தபடி தூத்துக்குடியில் ஒட்டப்பட்ட போஸ்டருக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் விஜய் பிரிட்டனுக்கு சென்றிருந்தார். அப்போது லண்டனில் நடைபெற்ற கார் ரேஸ் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் நடிகர் அஜித்தும், முதல்வர் விஜய்யும் நேரில் சந்தித்துக் கொண்டு தங்களது நட்பை பரிமாறிக் கொண்டனர். இந்தக் காட்சி இணையதளத்தில் வைரலான நிலையில், அஜித் மற்றும் விஜய்க்கு இருவருக்கும் இடையிலான நட்பு சமூக வலைதளங்களில் பேசும் பொருளானது.
அரசியலில் இருப்பதால் தான் அஜித்தை நட்புடன் அரவணைத்துச் சென்றதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். ஏனெனில் அஜித்துடன் நட்பு பாராட்டினால், அது தவெக-வுக்கு தேர்தலில் நல்ல முடிவைத் தரும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் இடைத்தேர்தலில் ‘இணைந்த கைகள் வெற்றி’ என்ற வாசகத்துடன் அஜித் - விஜய் இணைத்து தூத்துக்குடியில் ஒட்டப்பட்ட போஸ்டர் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சமீபத்தில் அஜித் ரசிகர்கள் ‘தமிழக மக்கள் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினர். இந்நிலையில் தவெக-வுக்கு நடிகர் அஜித் ஆதரவு அளிப்பது போன்ற போஸ்டர் ஒட்டப்பட்டது, அஜித் ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் ஒட்டப்பட்ட இந்தப் போஸ்டருக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் இடைத்தேர்தலில் தவெக-வுக்கு அஜித் ரசிகர்களின் வாக்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தை தவெக தலைமை நேர்த்தியுடன் அணுக வேண்டியது அவசியம். இல்லையென்றால் அஜித் - விஜய் ரசிகர்கள் மோதலாக பெரிய விவகாரமாக மாறி விடும். இடைத்தேர்தல் நடக்கவுள்ள சூழலில் முதல்வர் விஜய் இந்த விவகாரத்தை சுமுகமாக முடிப்பதே நல்லது.
முதல்வர் விஜய் மற்றும் நடிகர் அஜித் பொதுவெளியில் நட்பு பாராட்டிய நிலையில், இருவரின் ரசிகர்களும் இனி எவ்வித சண்டையும் இன்றி ஒற்றுமையோடு இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இடைத்தேர்தலில் தவெக-வுக்கு அஜித் ஆதரவு என்பது போல ஒட்டப்பட்ட போஸ்டரால், மீண்டும் விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல் உருவாக வாய்ப்புள்ளது.
ஏற்கனவே அஜித் ரசிகர்கள் கட்சியைத் தொடங்கி விட்டதால், அடுத்து வரும் தேர்தல்களில் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.