

இந்திய அரசமைப்பின் 42வது சட்டப்பிரிவு, ‘பணியிடங்களில் நியாயமான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான சூழலை உறுதி செய்வதோடு, பெண்களுக்குத் தேவையான மகப்பேறு நிவாரணம் வழங்குவதற்கும் அரசு வழிவகை செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்துகிறது. அரசமைப்புச் சட்டத்தின் இந்த வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றுவதில், இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
அந்த வகையில், தமிழக அரசு பெண் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்கும் வகையில், மிக முக்கியமான மற்றும் முற்போக்கான அறிவிப்பை தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசு வெளியிட்டுள்ளது.
அதாவது, அரசு பெண் ஊழியர்களின் 3-வது குழந்தைக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சரத்குமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தமிழக கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம்தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் மனிதவள மேலாண்மைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் சரத்குமார், அரசு பெண் ஊழியர்களின் நலன் கருதிப் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அரசு பெண் ஊழியர்களுக்கு 3-வது குழந்தை பிறக்கும் போது, 365 நாட்கள் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
தமிழகத்தில் இதற்கு முன்னதாக, 2 குழந்தைகளுக்கு மட்டுமே 365 நாட்கள் விடுப்பு வழங்கி வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு விதிகளின் திருத்தங்களைத் தொடர்ந்து தற்போது மகப்பேறு விடுப்பு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழக அரசுத்துறையில் வேலைசெய்யும் பெண் ஊழியர்கள் தங்களின் 3-வது குழந்தையைப் பெற்றெடுக்கும் போதும், அவர்களுக்குத் தலா 365 நாட்கள் அதாவது ஓராண்டுகள் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் தாய், சேர் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், குழந்தையைப் பராமரிக்கவும் இந்த விடுப்பு காலம் போதுமானதாக இல்லை என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்து வண்ணம் இருந்த நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் சரத்குமார் இந்த மகிழ்ச்சியான செய்தியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் இந்த அதிரடி முடிவிற்கு அரசு ஊழியர் சங்கங்களும், பெண் பணியாளர்களும் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பாக, இந்திய மகப்பேறு நலச் சட்டத்தின்படி (Maternity Benefit Act), இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களிலும் மற்றும் மத்திய அரசு விதிகளின்படியும், முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே ஒரு வருடம் முழுமையான மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டு வந்தது.
ஒருவேளை அவர்கள் 3-வது முறையாகக் குழந்தை பெற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவர்களுக்கு வெறும் 12 வாரங்கள் (அதாவது 3 மாதங்கள்) மட்டுமே விடுப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த விடுப்பு ஓராண்டாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது குழந்தையின் போதான பிரசவ வலியும், பராமரிப்புத் தேவையும் மற்ற பிரசவங்களைப் போன்றதே என்பதால், இந்தச் சலுகை மறுக்கப்படக் கூடாது என்று அண்மைக் காலங்களில் சென்னை ஐகோர்ட்டும் சில முக்கிய வழக்குகளில் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருவதால், அதனை அதிகரிக்கும் பொருட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.