

சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், கார்பன் உமிழ்வைக் குறைப்பதிலும் உலகப் புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வாகன் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளது. அதாவது, போலந்தின் போஸ்னானில் உள்ள வோக்ஸ்வாகன் (Volkswagen) நிறுவனம் தனது உற்பத்தி ஆலையில், 31,000-க்கும் மேற்பட்ட சோலார் பேனல்களுக்குக் கீழே உள்ள புல்லைப் பராமரிப்பதற்காக, பாரம்பரிய புல் வெட்டும் இயந்திரங்களுக்குப் பதிலாக 100 செம்மறி ஆடுகளை வேலைக்கு அமர்த்தி உள்ளது.
ஜெர்மனியை தளமாக கொண்டு இயங்கும் போக்ஸ்வேகன்(Volkswagen) நிறுவனம், உலகளவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் தொழிற்சாலைகள் உள்ளன. அந்த வகையில் போலந்து நாட்டின் போஸ்னான் என்ற நகரில் 'வோல்க்ஸ்வேகன்' நிறுவனத்துக்கு கார் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு தான் விஎம் இ-கிராஃப்டர் வேன் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த பிரம்மாண்ட தொழிற்சாலையில், 31,000-க்கும் மேற்பட்ட சூரிய மின் தகடுகளுக்குக் கீழே உள்ள புல்வெளிகளைப் பராமரிப்பதற்கும், மனிதர்கள் மூலம் இயந்திரங்களை (மெஷின்) பயன்படுத்தி வெட்டுவதற்கும் பதிலாக '100 ஆடுகளை' அதிகாரப்பூர்வமாக 'வேலைக்கு' அமர்த்தியுள்ளது.
வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் இந்த ஆலையை இயக்குவதற்காக, 18.3 மெகாவாட் திறன் கொண்ட பிரம்மாண்ட 'சோலார் மின் உற்பத்தி நிலையம்' அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 31 ஆயிரத்துக்கும் அதிகமான சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
ஆனால் இந்தப் பேனல்களுக்கு கீழே மிக வேகமாக வளரும் புற்களை வெட்டி அகற்றுவது பெரும் சவாலாக இருந்தது. இந்த புற்களை வெட்டுவதற்கு வழக்கமாக பயன்படுத்தப்படும் பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் புல் வெட்டும் இயந்திரங்களால் காற்று மற்றும் சத்த மாசுகள் ஏற்படுகின்றன.
இயந்திரப் பயன்பாட்டைக் குறைத்து கார்பன் உமிழ்வைத் தடுக்க, வோக்ஸ்வாகன் நிறுவனம் 'அக்ரிவோல்டாயிக்ஸ்' எனப்படும் விவசாயம் மற்றும் சூரிய ஆற்றலை ஒரே இடத்தில் இணைக்கும் நவீனத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
இயந்திரங்களுக்குப் பதிலாக 100 ஆடுகள் இந்தச் சோலார் பண்ணைக்குள் கொண்டு வரப்பட்டு புற்களை மேயும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் இயந்திரங்களின் இரைச்சல், எரிபொருள் செலவு மற்றும் புகை மாசு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. மேலும் ஆடுகளின் கழிவுகள் மண்ணிற்குச் சிறந்த இயற்கை உரமாக மாறுகின்றன.
இந்த நவீன திட்டத்தின் மூலம் இரு தரப்பினருக்கும் நன்மை கிடைக்கிறது. செம்மறி ஆடுகள் சூரியப் பண்ணையைப் பராமரிக்க உதவுகின்றன, அதே நேரத்தில் சோலார் பேனல்கள் ஆடுகளுக்கு நிழலை தருவதால், அவற்றிற்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் கிடைப்பதுடன், அவை சோர்வடையாமல் நிம்மதியாகப் புற்களை மேய்ந்து வருகின்றன.
மேலும் ஆடுகள் புல்லை மேய்வது, இயந்திரத்தால் புல் வெட்டுவதால் ஏற்படும் பராமரிப்புச் செலவுகளையும் கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்க உதவுகிறது.
விவசாயமும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலும் ஒரே நிலத்தில் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும் என்று ஆய்வு செய்ய, போஸ்னான் உயிர் அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
அதன் ஆராய்ச்சியாளர்கள், சோலார் பேனல்களுக்கு அடியில் செம்மறி ஆடுகள் மேய்வது விலங்குகளின் நலன், பல்லுயிர் பெருக்கம், மண்ணின் தரம், தாவரங்கள் மற்றும் அந்த இடத்தின் நுண் காலநிலை ஆகியவற்றை எவ்வாறு மேம்படுகிறது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் இந்த மேய்ச்சல் முறையானது பராமரிப்புச் செலவுகளையும் மாசு வெளியேற்றத்தையும் குறைப்பதோடு, பூச்சிகள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு மிகவும் உகந்த சூழலையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.